உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொழில் பிணைப்பை துண்டித்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 02 JUL 2025 5:34PM by PIB Chennai

உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடித்ததற்காக, தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலை, அவர்கள் எங்கிருந்து செயல்பட்டாலும் ஒடுக்கவும் நமது இளைஞர்களைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கூட்டணியை முறியடித்த செயலுக்கு தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்.

 

இந்த விசாரணை பல நிறுவன ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. இதன் விளைவாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  5 போதைப் பொருள் சரக்கு தொகுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 கண்டங்களில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கும்பல்கள் பயன்படுத்தும் கிரிப்டோ பணம் செலுத்துதல் போன்ற அதிநவீன முறைகளை இந்திய விசாரணை நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல் கும்பலையும் தண்டித்து, நமது இளைஞர்களைப் பாதுகாக்க உறுதியுடன் உள்ளது.”

இவ்வாறு திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை விவரம்:

புது தில்லியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 4 கண்டங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் போதைப் பொருள் கும்பல் பிடிபட்டது.  இதில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு பெரிய கட்டமைப்பைக் கொண்டு செயல்பட்டது தெரிய வந்தது.  அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த கும்பல் செயல்பட்டது தெரியவந்தது.  இந்த தகவல்கள் உலகளாவிய அமைப்புகள் மற்றும் இன்டர்போலுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.  இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141583

----

AD/TS/PLM/KPG/KR/DL


(Release ID: 2141633)