தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அனிமேஷன் திரைப்படம் உலகளவில் வெற்றி பெற ‘தேசி ஊன் ’ வழிவகுத்துள்ளது

Posted On: 18 JUN 2025 5:28PM by PIB Chennai

அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர் திரு சுரேஷ் எரியாட்டின் தேசி ஊன் திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பிரான்சில் நடைபெற்ற அனெசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விழாவில் சிறந்த தயாரிப்புக்கான நடுவர் விருதினை இத் திரைப்படம் வென்றுள்ளது. அனிமேஷன் திரைப்படத்திற்கான உலகின் கவுரவமிக்க இந்த விழாவில் பெறப்பட்ட அரிதான சிறப்புமிக்க இந்த விருதினால் உலக வரைபடத்தில் இந்திய அனிமேஷன் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேவ்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தியாவில் உருவாக்குவோம் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் திரு சுரேஷ் எரியாட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தேசி ஊன் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதினை பெற்றது.

தேசி ஊன் என்பது ஒரு திரைப்படம் என்பதை விடவும், கலாச்சார மைல் கல் ஆகும். இந்தியர்களின் நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றிய கதையம்சம் கொண்ட இது உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கான விருது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரியும், இந்தியாவில் உருவாக்குவோம் போட்டி 2025-ன் மேற்பார்வையாளருமான திரு அனுபவ் சிங், வேவ்ஸ் போன்ற தளங்கள் மூலமும், இந்தியாவில் உருவாக்குவோம் போட்டி போன்ற முன்முயற்சிகள் மூலமும், இந்தியாவின் படைப்பாக்கத் திறனை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கத்தின் இந்தியா பிரிவுத் தலைவர் திரு சஞ்சய் கிமேசாரா கூறுகையில், இந்த விருது சுரேஷ் எரியாட்டியுடையது மட்டுமல்ல, இந்தியாவுக்கானது என்றார். தேசி ஊன் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிப்பதோடு நகைச்சுவை, மனக்கிளர்ச்சி, கலைநயம் ஆகியவற்றின் கலவையாக உள்ளது என்றார். மிகப் பெரிதாக சிந்திக்கவும், ஆழமாக வேரூன்றி நிலைக்கவும், உலக அளவில் வெற்றி பெறவும், இந்தியாவின் புதிய தலைமுறை படைப்பாளர்களை இது ஊக்கப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

***

(Release ID: 2137361)
AD/SMB/RR/KR

 


(Release ID: 2137719)