விவசாயத்துறை அமைச்சகம்
வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் 5-வது நாளில் பீகார் விவசாயிகளை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
02 JUN 2025 5:30PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் ஒரு பகுதியாக 5-வது நாளான இன்று பீகாரின் கிழக்கு சம்ப்ரானில் உள்ள பிப்ரகோதியில், வேளாண் அறிவியல் மையத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். ஒடிசா, ஜம்மு, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இன்று பீகாரில் வேளாண் சமுதாயத்தினருடன் திரு சவுகான் உரையாடினார்.
வேளாண் அமைச்சர் என்பதற்கு உண்மையான பொருள் விவசாயிகளின் தொண்டர் என்பதை திரு சவுகான் வலியுறுத்தினார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்றும் அதன் உயிர்நாடி விவசாயிகள் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த வேளாண்மையின் மூலமே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சியடைந்த இந்தியா என்பது நனவாகும் என்றும் இந்த இயக்கத்திற்கு வளமான விவசாயிகளும் கூட்டான முயற்சிகளும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தின் போது குறிப்பாக லிச்சிப்பழ விவசாயிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், 48 மணி நேரத்திற்குள் இந்தப் பழம் அழுகிப் போவதால் நஷ்டம் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்த அவர், லிச்சிப் பழம் அழுகாமல் இருக்கும் கால அளவை நீடிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு ஐசிஏஆர் விஞ்ஞானிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
போலியான பூச்சி மருந்துகள் குறித்து கவலைத் தெரிவித்த அமைச்சர், இத்தகைய வேளாண் ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கு இந்த இயக்கம் பயன்படுகிறது என்றும் தற்போது 16,000 விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுக் கூடங்களிலிருந்து கிராமங்களில் உள்ள விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராதா மோகன் சிங், உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், அரசு அலுவலர்கள் ஆகியோருடன் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133317
----
AD/TS/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2133364)
आगंतुक पटल : 15