பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதல் ; பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அது இந்தியக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் – பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
30 MAY 2025 1:18PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும். மேலும் பாகிஸ்தான் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்திய கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று (30.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடையே அவர் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய கடற்படையின் அமைதியான சேவையைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், பாகிஸ்தான் கடற்படை வெளியேறாமல் இருந்ததை உறுதி செய்ததாக கூறினார். பாகிஸ்தான் தீய எண்ணத்துடன் செயல்பட முயன்றால், இந்திய கடற்படை மூலம் மத்திய அரசு பதில் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடத்தி வரும் பயங்கரவாதம் ஆபத்தான விளையாட்டு என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். தற்போது, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதன் விளைவுகளை அது ஏதிர்கொண்டு தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா தயங்காது என்றும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளையும் இந்தியா முழு சுதந்திரத்துடன் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை இன்று உலகம் ஒப்புக்கொள்வதாகவும், பாகிஸ்தான் தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். அவர்கள் இருவரும் இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் மட்டுமல்ல, ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளாகவும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார். மும்பை தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா அண்மையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சயீது செய்த குற்றத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், பேச்சு வார்த்தை என ஒன்று இருந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்றார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், நீதியை நிலைநாட்ட ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இது ஒரு இடைநிறுத்தம் என்றும் பாகிஸ்தான் மீண்டும் அதே தவறைச் செய்தால், இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132623
**
AD/TS/GK/KPG/SG
(Release ID: 2132738)