நிதி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நடவடிக்கைகளில் சுமார் ரூ.23.5 கோடி மதிப்பிலான ஹெராயின், மெத்தபெட்டமைன் ஆகியவற்றை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேர் கைது
Posted On:
28 MAY 2025 12:16PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் 19 பிஎன் அசாம் ரைபிள்ஸின் உதவியுடன், மணிப்பூரின் நோனி, தேசிய நெடுஞ்சாலை-37-ல் 21.05.2025 அன்று ஒரு லாரியை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 569 கிராம் ஹெராயின், 1,039 கிராம் மெத்தபெட்டமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் லாரியின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மற்றொரு நடவடிக்கையில், 22.05.2025 அன்று சில்சார் அசாம் ரைபிள்ஸ் எஃப்ஐயு பிரிவு உதவியுடன், வருவாய் புலனாய்வுத் துறையினர், 22.05.2025 அன்று, அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள அலோய்செராவில் ஒரு லாரியை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,640.53 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட கடத்தல் போதைப்பொருட்கள் சர்வதேச சந்தையில் சுமார் ரூ.23.5 கோடி மதிப்புடையதாகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல், வடகிழக்குப் பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.173 கோடி மதிப்பிலான கஞ்சா, மெத்தபெட்டமைன் மாத்திரைகள், ஹெராயின் போன்ற கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளனர்.
****
(Release ID: 2131923)
AD/SM/IR/KPG/RR
(Release ID: 2131971)