சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நடப்பாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் 'ஒரு நாடு, ஒரு நோக்கம்: பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது
Posted On:
22 MAY 2025 2:05PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இன்று 2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் 'ஒரு நாடு, ஒரு நோக்கம்: பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தப் பிரச்சாரம் இந்தியாவின் முதன்மை முயற்சியான மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) உடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு பிரச்சாரத்திற்கு முந்தைய காணொளியை வெளியிட்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர நீடித்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம் அனைவரும் கூட்டாக விழிப்புணர்விலிருந்து செயலுக்கு நகர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உலகளாவிய விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய தளமாக செயல்படுகிறது. மிஷன் லைஃப் கருப்பொருள்: 'ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை வேண்டாம் என்று சொல்லுங்கள்', இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்கள் இந்த செய்தியை வலுப்படுத்துகிறது.
பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்கள்:
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆதரவு
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உட்பட பிளாஸ்டிக் பொருட்களின் குறைவான பயன்பாடு மற்றும் கழிவுகள் உருவாக்கம் குறைத்தல்
பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தல், சேகரித்தல், அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் மூலம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் உட்பட பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல்.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு நிலையான மாற்றுகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
பிரச்சார செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடு
2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்த பிரச்சாரம், பிளாஸ்டிக் மாசுபாட்டின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் நட்பு மாற்றுகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. சமூகக் கல்வி, நடத்தை மாற்ற முயற்சிகள் மற்றும் நிலையான பொருட்களில் புதுமை மூலம் மக்களை அதிக சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறைகளை நோக்கித் தூண்டுவதே இதன் நோக்கம்.
இந்த பிரச்சாரம் மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில், பொது சமூகம் மற்றும் சமூகக் குழுக்கள் முழுவதும் பரந்த அளவிலான செயல்பாடுகளைக் காணும். ஈடுபாட்டின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:
- சமூக ஊடக பிரச்சாரங்கள், வீதி நாடகங்கள், பொது உறுதிமொழிகள், சுவரொட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள், மாரத்தான் போன்ற செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- கடற்கரைகள், பூங்காக்கள், ஆற்றங்கரைகள், வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மைப்படுத்தும் இயக்கங்கள்.
- நிலையான நடைமுறைகள் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கான மாற்றுகள் குறித்த பட்டறைகள் மற்றும் இணையவழிப் பயிற்சிகள்
- மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து கலை மற்றும் கைவினைப்பொருட்கள், பள்ளிக் கண்காட்சிகள், ஹேக்கத்தான்கள், விநாடி வினாக்கள் மற்றும் கருப்பொருளை வலியுறுத்தும் விளையாட்டுகள் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள்
- உள்ளூர்மயமாக்கப்பட்ட கழிவுப் பிரிப்பு மற்றும் மறுசுழற்சி முயற்சிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்கள், நகராட்சி அமைப்புகள், அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றின் சமூக மற்றும் நிறுவன ஈடுபாடு.
அரசு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட பங்கேற்கும் அனைத்து பங்குதாரர்களும் தங்கள் முயற்சிகளை பிரச்சார கருப்பொருளுடன் இணைத்து 'மேரி லைஃப்' போர்ட்டலில் செயல்பாட்டு விவரங்களைப் பதிவேற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த முயற்சிகள் நிலையான வாழ்க்கைக்கான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அனைத்து குடிமக்களும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர பங்களிக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுக்கிறது.
***
(Release ID: 2130464)
AD/SM/KPG/KR
(Release ID: 2130500)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Hindi_Ddn
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Malayalam