பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் ஒலிவியா: ஒடிசா கடற்கரையில் 6.98 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல்படை பாதுகாத்துள்ளது
Posted On:
19 MAY 2025 1:07PM by PIB Chennai
கடல்சார் சூழலியல் பாதுகாப்பிற்கு மிகப் பெரும் ஊக்கமாக, இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) வருடாந்திர பணியான 'ஆபரேஷன் ஒலிவியா' பிப்ரவரி 2025-ல் ஒடிசாவில் உள்ள ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் சாதனை அளவாக 6.98 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடு கட்டியதைப் பாதுகாக்க உதவியது. நவம்பர் முதல் மே வரை ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆபரேஷன் ஒலிவியா, குறிப்பாக கஹிர்மாதா கடற்கரை மற்றும் ஒடிசாவை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு பாதுகாப்பான கூடு கட்டும் இடங்களை உறுதி செய்கிறது. இது இந்திய கடலோர காவல்படையின் ஒரு முக்கியமான முயற்சியாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமான ஆமைகள் வருகின்றன. ஒடிசாவில் உள்ள ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் அதிக அளவில் அவை கூறுகளைக் கட்டுகின்றன. கடுமையான ரோந்து, வான்வழி கண்காணிப்பு மற்றும் சமூக ஈடுபாடு மூலம் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் இந்திய கடலோர காவல்படையின் நீடித்த முயற்சிகளுக்கு இந்த ஆபரேஷன் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
ஆபரேஷன் ஒலிவியா தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய கடலோர காவல்படை, 5,387-க்கும் அதிகமான மேற்பரப்பு ரோந்துப் பணிகளையும், 1,768 வான்வழி கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் வாழ்விட சீர்குலைவு போன்ற அச்சுறுத்தல்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 366 படகுகள் பிடித்துவைக்கப்பட்டன. இது கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதில் இந்திய கடலோர காவல்படையின் வலுவான அமலாக்கப் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கண்காணிப்பைத் தவிர, ஆமைகளை விலக்கிவிடும் சாதனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புக் கல்வியை ஆதரிப்பதற்காக முறையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்திய கடலோர காவல்படை உள்ளூர் மீன்பிடி சமூகங்களுடன் தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.
***
(Release ID: 2129578)
TS/SMB/AG/KR
(Release ID: 2129588)