பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தேசிய பாதுகாப்பு கோட்பாட்டின் ஒரு பகுதி: பூஜ் விமானப்படை தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 16 MAY 2025 2:06PM by PIB Chennai

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வெறும் பாதுகாப்பு விஷயமல்ல எனவும், அது தேசிய பாதுகாப்பு கோட்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நேரடி அல்லது மறைமுகப் போர்களை இந்தியா முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று (மே 16, 2025) குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களிடையே உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், தற்போதைய போர் நிறுத்தம் என்பது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனை என்று கூறினார். பாகிஸ்தான் தனது மோசமான நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் நல்லது எனவும், மாறாக இடையூறுகளை ஏற்படுத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்தினார். நமது நடவடிக்கைகள் வெறும் முன்னோட்டம் மட்டுமே எனவும், தேவைப்பட்டால் முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது புதிய இந்தியாவின் நடவடிக்கை என்று அவர் கூறினார்.

இந்தியாவால் அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை பாகிஸ்தான் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று கூறிய திரு. ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாத்திற்கு வழங்கிய ஒரு பில்லியன் டாலர் உதவியை மறுபரிசீலனை செய்யுமாறும், எதிர்காலத்தில் எந்த ஆதரவையும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் சர்வதேச செலாவணி நிதியத்தை கேட்டுக் கொண்டார். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்க பாகிஸ்தான் அரசு நிதி உதவியை வழங்குவதாக அவர் குற்றம் சாட்டினார். சர்வதேச செலாவணி நிதியத்தின் ஒரு பில்லியன் டாலர் உதவியில் பெரும்பகுதி பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் என்று திரு ராஜ்நாத் சிங் அச்சம் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாத நிதியுதவிக்குக் குறைவானதல்ல என்று அவர் கூறினார்.

உலகத்தால் பாராட்டப்படும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார். பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத முகாம்களை வெறும் 23 நிமிடங்களில் அழித்ததற்காக விமானப்படை வீரர்களைப் பாராட்டிய அவர், எதிரிகளின் எல்லைக்குள் ஏவுகணைகள் வீசப்பட்டபோது, ​​இந்தியாவின் வீரத்தையும், வலிமையையும் உலகம் பார்த்தது என்றார்.

இந்தியாவின் போர் விமானங்கள் எல்லையைத் தாண்டாமல் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் திறன் கொண்டவை என்பதை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இந்திய விமானப்படை, பயங்கரவாத முகாம்களையும் பின்னர் பாகிஸ்தானின் விமான தளங்களையும் எவ்வாறு தாக்கியது என்பதை உலகம் கண்டதாக அவர் கூறினார். இந்தியாவின் போர்க் கொள்கையும், தொழில்நுட்பமும் மாறிவிட்டன என்பதற்கான ஆதாரத்தை இந்திய விமானப்படை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா இப்போது இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களையும், தளவாடங்களையும் மட்டுமே சார்ந்து இருக்கவில்லை என அவர் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் நமது ராணுவ சக்தியின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று ஸ்ரீநகரில் உள்ள பாதாமி பாக் கண்டோமில் இந்திய ராணுவ வீரர்களுடனும், இன்று பூஜ்-ஜில் உள்ள விமான வீரர்கள் மற்றும் வீரர்களுடனும் அவர் நடத்திய உரையாடலில், இந்தியாவின் எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று அமைச்சர் கூறினார்.

1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்களின் போதும், தற்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பூஜ் சாட்சியாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் வீரர்கள் உயர்ந்து நிற்கும் ஒரு தேசபக்தி பூமியாக பூஜ் உள்ளது என அவர் குறிப்பிட்டார். தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக விமானப் படை வீரர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பஹல்காமில் இறந்த அப்பாவி உயிர்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரின் போது தியாகம் புரிந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக அமைச்சர் கூறினார். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், பிற மூத்த விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2129052)
SM/PLM/RR/SG

 


(Release ID: 2129076)