மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர் ஏ.எஸ். அஜய் குமார் பொறுப்பேற்றார்

Posted On: 15 MAY 2025 1:11PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் டாக்டர் ஏ.எஸ். அஜய் குமார், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இன்று பதவியேற்று ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து கொண்டார். ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா (ஓய்வு) அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியலில் பி.டெக். படித்த அஜய் குமார், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், கார்ல்சன் மேலாண்மைப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அமிட்டி பல்கலைக்கழகத்தால் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

டாக்டர் ஏ.எஸ். அஜய் குமார் இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்) கேரள கேடரின் 1985 தொகுதியைச் சேர்ந்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற பணி வாழ்க்கையில், கேரள மாநில அரசு மற்றும் மத்திய அரசிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். மாநிலத்தில் அவருக்குப் வழங்கப்பட்ட சில முக்கியமான பணிகள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக இயக்குநர்; தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டவையாகும். மத்திய அரசில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர்; தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர்; தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குநர்; மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்; பாதுகாப்பு உற்பத்திச் செயலாளர் ஆகிய குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்தார். அவர் கடைசியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

"ஜீவன் பிரமான்" (ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள்); myGov, பிரகதி (பிரதமரின் வீடியோ மாநாடு); பயோ-மெட்ரிக் வருகை அமைப்பு; எய்ம்சில் ஓபிடி பதிவு முறை உள்ளிட்ட பல மின்-ஆளுமை முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

டாக்டர் ஏ.எஸ். அஜய் குமார் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும், 1994 ஆம் ஆண்டு தேசிய சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளால் "வெள்ளி யானை" பதக்கம்; 2015 ஆம் ஆண்டு இந்திய மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி சங்கத்தால் "தொழில்நுட்ப சாராபாய் விருது"; 2015 ஆம் ஆண்டு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் "மாற்றத்தின் சாம்பியன்" போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

***

(Release ID: 2128817)
SM/PKV/RR/RJ


(Release ID: 2128834)