பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு 'பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை' ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயன்படுத்தியது: பாதுகாப்பு அமைச்சர்

Posted On: 07 MAY 2025 5:50PM by PIB Chennai

"ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு 'பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை' பயன்படுத்தியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2025 மே 07 அன்று தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள மானேக்ஷா மையத்தில் எல்லை சாலைகள் அமைப்பின் 66-வது எழுச்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்  பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட முகாம்களை பாதுகாப்பு படையினர்  துல்லியம், முன்னெச்சரிக்கை மற்றும் கருணையுடன் செயல்பட்டு தாக்கி வரலாற்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்‌. திட்டத்தின்படி, இலக்குகள் அழிக்கப்பட்டன என்றும், பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உரிய பதிலடி கொடுத்த ஆயுதப் படைகளைப் பாராட்டினார்.

நமது ஆயுதப் படைகள் இன்று என்ன செய்தன என்பதை உலக நாடுகள் கண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மிகவும் சிந்தனையுடனும், அளவுடனும் மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய அவர், பயங்கரவாதிகளின் மன உறுதியை குலைக்கும்  நோக்கத்துடன் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் முகாம்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். அதற்காக நாட்டு மக்களின் சார்பாகவும் ஆயுதப் படைகளை தான் வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார். படைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியையும் தான் வாழ்த்துவதாக திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், எல்லை சாலைகள் அமைப்பின் 50 முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், 30 பாலங்கள், 17 சாலைகள் மற்றும் மூன்று பிற பணிகள் ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார். மொத்தம் ரூ.1,879 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜம்மு & காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், மிசோரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய   6 எல்லை மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127561

***

TS/IR/AG/DL


(Release ID: 2127582) Visitor Counter : 55