பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில்(கிளெக்ஸ்-2025) உரையாற்றினார்

விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல, ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம்: பிரதமர்

இந்திய ராக்கெட்டுகள் 140 கோடி இந்தியர்களின் கனவுகளைச் சுமந்து செல்கின்றன: பிரதமர்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான், விண்வெளி தொழில்நுட்பத்தில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது: பிரதமர்

இந்தியாவின் பல விண்வெளிப் பயணங்கள் பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுகின்றன: பிரதமர்

இந்தியாவின் விண்வெளிப் பார்வை உலகம் ஒரே குடும்பம்(வசுதைவ குடும்பகம்)என்ற பண்டைய தத்துவத்தில் வேரூன்றியுள்ளது: பிரதமர்

Posted On: 07 MAY 2025 12:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம் என்றும் அவர் கூறினார். 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ராக்கெட்டுகள் சாதனங்களை மட்டுமல்லாமல் அவை 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்தியாவின் விண்வெளி முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் எனவும் மனித உணர்வுகள் ஈர்ப்பு விசையை மீற முடியும் என்பதற்கான சான்றுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை அவர் நினைவு கூர்ந்தார். சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது என அவர் கூறினார். சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் விண்வெளிப் பயணம் மற்றவர்களுடன் போட்டியிடுவது பற்றியது அல்ல எனவும் மாறாக இணைந்து அதிக உச்சங்களை அடைவது பற்றியது என்றும் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளியை ஆராய்வதற்கான கூட்டு இலக்கை அவர் வலியுறுத்தினார். தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்துவதை நினைவு கூர்ந்த அவர், பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். இந்தியாவின் தலைமைத்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி20 செயற்கைக்கோள் இயக்கம், உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா புதிய நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், அறிவியல் ஆய்வின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான 'ககன்யான்', விண்வெளி தொழில்நுட்பத்தில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். வரும் வாரங்களில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இஸ்ரோ-நாசா கூட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்வார் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். 2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் விண்வெளி நிலையம் புதிய ஆராய்ச்சியையும், சர்வதேச ஒத்துழைப்பையும் எளிதாக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக் காட்டினார். 2040-ம் ஆண்டுக்குள், ஒரு இந்திய விண்வெளி வீரர் சந்திரனில் கால்தடங்களைப் பதிப்பார் என்று அவர் கூறினார். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகியவை இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களில் முக்கிய இலக்குகளாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, விண்வெளி என்பது ஆய்வு மட்டுமல்ல எனவும், அதிகாரமளிப்பதும் ஆகும் என்றும் கூறிய பிரதமர், விண்வெளி தொழில்நுட்பம் எவ்வாறு நிர்வாகத்தை மேம்படுத்துகிறது என்பதையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தலைமுறைகளை ஊக்குவிக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார். மீனவர்களுக்கான எச்சரிக்கைகள், கதிசக்தி தளம், ரயில்வே பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றில் அவற்றின் பங்களிப்பை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு இந்தியரின் நலனையும் உறுதி செய்வதில் செயற்கைக்கோள்களின் முக்கிய பங்கை அவர் குறிப்பிட்டார். புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள் ஆகியோருக்கு விண்வெளித் துறையைத் திறப்பதன் மூலம் புதுமைகளை வளர்ப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் தற்போது 250-க்கும் மேற்பட்ட விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும், அவை செயற்கைக்கோள் தொழில்நுட்பம், உந்துவிசை அமைப்புகள், இமேஜிங், பிற முன்னோடித் துறைகளில் முன்னேற்றங்களுக்கு பங்களிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "இந்தியாவின் பல விண்வெளிப் பயணங்கள் பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுகின்றன" என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் விண்வெளிப் பார்வை உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் பண்டைய தத்துவத்தில் வேரூன்றியுள்ளது என்று திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் விண்வெளிப் பயணம் அதன் சொந்த வளர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல எனவும், உலகளாவிய அறிவை வளப்படுத்துவது, பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வது, எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பது ஆகியவை பற்றியது என்றும் அவர் கூறினார். ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். கனவுகளை நனவாக்கி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், விண்வெளி சாதனையில் உயரங்களை அடைவதற்கும் தேசம் தீவிரமான ஆர்வத்துடன் உள்ளது என்று அவர் கூறினார். அறிவியல் மூலமாகவும் சிறந்த எதிர்காலத்திற்கான கூட்டு விருப்பத்தாலும் வழிநடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2127419)
TS/PLM/RR/KR


(Release ID: 2127482) Visitor Counter : 20