தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பொருட்கள் ஏற்றுமதித் திறனை எடுத்துக்காட்டும் “பாரத் டெலிகாம் 2025” கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
Posted On:
06 MAY 2025 1:41PM by PIB Chennai
“பாரத் டெலிகாம் 2025 என்ற தொலைத்தொடர்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வை புதுதில்லியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா இன்று (06.05.2025) தொடங்கி வைத்தார். தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (TEPC), தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரத் டெலிகாம் 2025, தொலைத்தொடர்பு உற்பத்தி, சேவைகள், ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் திறனை எடுத்துக்காட்டும் தளமாக அமைந்துள்ளது.
இந்த இரண்டு நாள் நிகழ்வில், 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இது வெறும் மாநாடு மட்டுமல்ல என்றும், புதுமை, ஒத்துழைப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் உலகளாவிய தொலை தொடர்பு எதிர்காலத்தை வடிவமைக்கும் செயல்பாடு என்றும் கூறினார்.
முற்போக்கான சீர்திருத்தங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்றவற்றால் இந்தியா, தொலைத்தொடர்புத் துறையில் புதுமைகளின் மையமாக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், அசைக்க முடியாத உறுதியுமே இந்தியாவை உலகளாவிய முன்னணி டிஜிட்டல் மையமாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
4ஜி மற்றும் 5ஜி தொலைத் தொடர்பில் இந்தியா உலகத்துடன் இணைந்து செயல்பட்டது மட்டுமல்லாமல், தற்போது முன்னணியில் உள்ளது என்று அவர் கூறினார். உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையாகவும், மலிவான கட்டணத்தில் தரவு வழங்கும் நாடாகவும் தற்போது இந்தியா மாறியுள்ளது என திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர், தற்போது இந்தியா உலகத் தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு தீர்வுகளை உருவாக்கும் நாடாக உள்ளது என்றார். உலகளாவிய தொலைத்தொடர்பு அரங்கில் இந்தியா ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், நுகர்வோர் என்ற நிலையிலிருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் தெரிவித்தார். இந்த முன்னேற்றம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியால் சாத்தியமானது எனவும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குத் தலைமையே இதற்கு காரணம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2127228)
SM/PLM/RR/KR
(Release ID: 2127234)