பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

இன்று நாம் உருவாக்கும் கொள்கைகள், எடுக்கும் முடிவுகள், அடுத்த ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும்: பிரதமர்

இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என இந்தியச் சமுதாயத்தின் லட்சியங்கள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன. இந்த அசாதாரண விருப்பங்களை நிறைவேற்ற, அசாதாரண வேகம் மிகவும் அவசியமாகிறது: பிரதமர்

உண்மையான முன்னேற்றம் என்பது சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தொழில்முனைவோருக்கான நிதி வசதி, ஒவ்வொரு கிராமத்திற்கும் டிஜிட்டல் பொருளாதாரப் பயன்பாடுகள் ஆகியவையே முழுமையான வளர்ச்சி: பிரதமர்

திட்டங்கள் மக்களைச் சென்றடைவதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை பொறுத்தே நிர்வாகத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது: பிரதமர்

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன: பிரதமர்

ஆளுகை, வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றில் இந்தியா புதிய அளவுகோல்களை நிர்ணயித்து வருகிறது: பிரதமர்

இந்தியாவின் செயல்பாடுகள் ஜி-20 அமைப்பை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. இந்தியா தனது பங்கை அளிப்பதுடன் வழிநடத்துவதாகவம் உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன: பிரதமர்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில், ஆளுகை என்பது நிர்வாகம் மட்டுமின்றி வாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும்: பிரதமர்

அரசுப் பணியாளர்களின் திறனை அதிகரிப்பதுடன், எதிர்காலத்திற்குத் தேவையான குடிமைப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் வகுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கர்மயோகி இயக்கம் மற்றும் குடிமைப்பணித் திறன் மேம்பாட்டுத் திட்டம் அவசியம்: பிரதமர்

Posted On: 21 APR 2025 1:14PM by PIB Chennai

17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு  ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர  மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.

செங்கோட்டையில் இருந்து தாம் முன்பு வெளியிட்ட அறிக்கையை நினைவுகூர்ந்த திரு மோடி, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "நாம் உருவாக்கும் கொள்கைகள், எடுக்கும் முடிவுகள், அடுத்த ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறினார்". பண்டைய வேதங்களை மேற்கோள் காட்டிய அவர், ஒரு ரதம் சக்கரமின்றி இயங்க முடியாதது போல், முயற்சியின்றி விதியை மட்டுமே நம்பி வெற்றி அடைய முடியாது என்று கூறினார். வளர்ச்சியடைந்த  இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதில் கூட்டு முயற்சியுடன் உறுதியான செயல்பாடுகளின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து  பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலக அளவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடும்பங்களுக்குள் இளைய தலைமுறையினரிடையே இடைவெளி ஏற்பட்டு வருவதாகக் கூறினார். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நவீன தொழில்நுட்ப  சாதனங்களின் விரைவான பரிணாம வளர்ச்சி மாற்றத்துக்கு இடையில்தான் குழந்தைகள் வளர்ந்து வருகின்றன  என்று பிரதமர்  எடுத்துரைத்தார். இந்தியாவின் அதிகாரத்துவம், பணி நடைமுறைகள், கொள்கை உருவாக்கம் ஆகியவற்றைக் காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.   2014-ம் ஆண்டில் மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப திட்டங்களையும் மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள, இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மே்றகொள்ளப்படும் நடவடிக்கைகள், அவர்களின் லட்சியங்கள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டுவதற்கு உதவும் என்று கூறினார். எரிசக்தி பாதுகாப்பு, தூய்மை எரிசக்தி, விளையாட்டில் முன்னேற்றம், விண்வெளி ஆகிய சாதனைகள் உள்ளிட்ட எதிர்கால இந்தியாவின் லட்சிய இலக்குகளைப் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.  அனைத்துத் துறைகளிலும் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு மகத்தான பொறுப்பு உள்ளதாகக் கூறினார். இதற்கான இலக்குகளை அடைவதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு குடிமைப்பணித் தினத்தின் மையக்கருத்தான "இந்தியாவின் முழுமையான வளர்ச்சி" குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு மோடி,  இது நாட்டு மக்களுக்கான உறுதிப்பாடு என்று கூறினார். "இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது ஒவ்வொரு கிராமமும், குடும்பமும், குடிமகனும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும்" என்று கூறினார். உண்மையான முன்னேற்றம் என்பது சிறிய அளவிலான  மாற்றங்கள் குறித்தது அல்ல என்றும் அது  நாடு முழுவதும் முழு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தொழில்முனைவோருக்கு நிதியுதவி, கிராமப்புறங்களில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பயன்களை கிடைக்கச் செய்வது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக்காட்டினார். நிர்வாகத்தின் தரம் திட்டங்களைத் தொடங்குவது மட்டுமின்றி அவை எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைகிறது என்பதில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ராஜ்கோட், கோமதி, தின்சுகியா, கோராபுட் மற்றும் குப்வாரா போன்ற மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்கச் செய்வது முதல் சூரிய மின்சக்தித் திட்டத்தை செயல்படுத்துவது வரை அப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகளில் தொடர்புடைய மாவட்டங்கள், தனிநபர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்களது சிறப்பான  பணிகளுக்கும், பல்வேறு மாவட்டங்கள் பெற்ற விருதுகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விரைவான முன்னேற்றம்  அடைந்து வருவதாகக் கூறிய பிரதமர், நாட்டின் நிர்வாகமானது அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தொழில்நுட்பம் மற்றும் புதுமையான நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். இது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் அவற்றின் தாக்கத்தைக் காணமுடிவதாக அவர் கூறினார். முன்னேற்றம் அடைய விரும்பும் மாவட்டங்களின்(ஆஸ்பைரேஷனல்) வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர் முன்னேற்றம் அடைய விரும்பும் வட்டாரங்களின் சாதனைகளையும் குறிப்பிட்டார்.  இந்தத் திட்டம்  2023-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட தாகவும் இரண்டு ஆண்டுகளிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூக மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் பீப்லு பகுதியில், செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான அளவீட்டுத் திறன் 20%இல் இருந்து  99% ஆக அதிகரித்துள்ளதை மேற்கோள் காட்டிய பிரதமர், பீகார் மாநிலம் பாகல்பூரின் ஜகதீஷ்பூர் தொகுதியில், முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களின் பதிவு முதல் மூன்று மாதங்களில் 25% இல் இருந்து  90% ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் /மார்வா தொகுதியில், மருத்துவமனைகளில் பிரசவம் 30% இல் இருந்து  100% ஆகவும், ஜார்க்கண்டின் குர்திஹ் தொகுதியில், குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் 18% இல் இருந்து 100% ஆகவும் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் மேலும் கூறினார்.  இவை புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைந்ததற்கான சான்றாக உள்ளதென்றும் அவர் கூறினார். "சரியான நோக்கம், திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் மூலம், தொலைதூரப் பகுதிகளில் கூட மாற்றங்களை உருவாக்குவது சாத்தியமாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல சாதனைகளை எடுத்துரைத்த அவர், பல்வேறு துறைகளில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகதா தெரிவித்தார். "இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் புதிய அளவுகோல்களை நிர்ணயித்து வருவதாக கூறினார். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்று நடத்தியது இது போன்ற முன்னேற்ற நடிவக்கைகளுக்கான சிறந்த உதாரணமாக உள்ளதென்று பிரதமர் தெரிவித்தார். ஜி 20 வரலாற்றில் முதல் முறையாக, 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், இது ஒரு பரந்த, உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்கியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மக்களின் பங்கேற்புடன் ஜி-20 உச்சிமாநாடு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சிப் பெற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார். "இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் பிற நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது என்றும் அவர் கூறினார்.

அரசின் செயல்திறன் குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த விஷயத்தில் இந்தியா பிற நாடுகளை விட 11 ஆண்டுகள் முன்னணியில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதங்களைக் குறைக்கவும், புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தவும், தொழில்நுட்பத்தின் வாயிலாக குறிப்பிட்ட காலத்தில் பணிகளை நிறைவேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். 40,000-க்கும் மேற்பட்ட இணக்க நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது வர்த்தகம் புரிதலை எளிமையாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 3,400-க்கும் மேற்பட்ட சட்ட விதிகள் குற்றமற்றவை என்று அறிவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் போது எதிர்கொண்ட எதிர்ப்பையும் அவர் நினைவு கூர்ந்தார். விமர்சகர்கள் இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து  கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார். எனினும், மத்திய அரசு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் புதிய முடிவுகள், புதிய அணுகுமுறைகள் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இது போன்ற முயற்சிகளின் விளைவாக எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக உலக நாடுகள்  இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாநிலங்கள், மாவட்டங்கள், வட்டாரங்கள் சிவப்பு நாடா முறையை நீக்கி விட்டு இலக்குகளை எட்ட திறம்பட செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

"கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக" கூறிய பிரதமர் திரு மோடி, இது வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பெரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உதவிடும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் பல்வேறு சவால்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்கள் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்றடையச் செய்வதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மக்களின் அதிகரித்து வரும் தேவைகள், விருப்பங்களைக் குறிப்பிட்ட அவர், குடிமைப் பணியில் சமகால சவால்களுக்கு ஏற்ப அதிகாரிகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். முந்தைய அளவுகோல்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து  புதிய அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையிலும் இலக்குகளை எட்டுவதற்கான துரிதமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த பிரதமர், தொழில்நுட்பத்தின்  சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கடந்த பத்தாண்டுகளின் சாதனைகளைப் பட்டியிலிட்ட பிரதமர் திரு மோடி, ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 12 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு 5 முதல் 6 ஆண்டுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான இலக்குடன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களின் கண்ணியமான வாழ்விற்காக 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் கழிவு மேலாண்மையில் புதிய இலக்குகளை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். ஊட்டச்சத்து மேம்பாடு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் திரு மோடி, 100% மக்களுக்கும் பலன் சென்று சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது நாட்டில் வறுமை இல்லாத நிலையை உருவாக்க வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்மயமாக்கல், தொழில்முனைவு ஆகியவற்றுக்கான தடைகளை அகற்றுவதில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், மக்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான சூழல் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். "குடிமைப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகள் தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார். குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையின் வளர்ச்சியை மேற்கோள் காட்டிய அவர், உற்பத்திக்கான இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இயக்கத்தின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சார்ந்துள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நாட்டில் உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், இளம் தொழில்முனைவோருக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் பெருகி வருவதாகக் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறு தொழில் முனைவோரிடமிருந்து மட்டுமின்றி உலக அளவிலும் போட்டிகளை எதிர்கொண்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். வர்த்தக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம், இந்திய புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறினார். எனவே, உலக அளவில் சிறந்த நடைமுறைகளை இந்தியா மதிப்பீடு செய்து அதற்கேற்ப புத்தொழில் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதுடன் வர்த்தக நடைமுறைகனைள எளிமைப்படுத்துவதன் மூலம் இணக்கமான சூழலை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

குடிமைப்பணி அதிகாரிகள் நவீன தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.  "தொழில்நுட்ப யுகத்தில், ஆளுகை என்பது அமைப்புகளை நிர்வகிப்பது மட்டுமின்றி, வாய்ப்புக்களை  உருவாக்குவதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுக்க வேண்டும் என்றும் அவை திறன் வாய்ந்ததாகவும் எளிதில் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். துல்லியமான கொள்கை வடிவமைப்பு, அதன்  அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்ய தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் இயற்பியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து, டிஜிட்டல், தகவல் தொழில்நுட்பத்தை விஞ்சும் வகையில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்துவது குறித்தும், சிறந்த சேவைகளை வழங்கவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் இந்த தொழில்நுட்பப் புரட்சிக்கு குடிமைப் பணி அதிகாரிகள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்காலத்திற்கு உகந்த குடிமைப் பணியை உருவாக்க, குடிமைப் பணி அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த இலக்கை அடைவதில் கர்மயோகி இயக்கம், குடிமைப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

வேகமாக மாறிவரும் சூழலில் உலக அளவிலான சவால்களை உன்னிப்பாக கண்காணித்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், உணவு, நீர், எரிசக்தி பாதுகாப்பு ஆகியன முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன என்று குறிப்பிட்டார். குறிப்பாக உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை தற்போது நடைபெற்று வரும் மோதல்கள்,  சிக்கல்கள் அதிகரித்து வருவதாகவும், அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை வெகுவாகப் பாதிப்பதாகவும் அவர் கூறினார். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் காரணிகளுக்கு இடையே வளர்ந்து வரும் பரஸ்பர தொடர்புகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவுகள், தொற்றுநோய், சைபர் குற்றம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதிகரித்து வரும் உலகளாவிய சிக்கல்களை திறம்பட சமாளிக்க ஏதுவாக உத்திகளை உருவாக்கவும், நெகிழ்வுத்திறனை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

செங்கோட்டையில் அறிமுகப்படுத்தப்பட்ட "பாஞ்ச் பிரான்" என்ற 5  உறுதிமொழிகள் குறித்து மீண்டும் வலியுறுத்திய திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை, பாரம்பரியத்தின் பெருமிதம், ஒற்றுமையின் சக்தி, கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுதல் ஆகியவையே இந்த ஐந்து உறுதிமொழிகளாகும் என்று குறிப்பிட்டார். இந்தக் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்பவர்களாக குடிமைப் பணி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். "குடிமைப்பணி அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், புதுமைக்கும், சேவைக்கும் முன்னுரிமை அளித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசுப் பணியாளர்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகதா தெரிவித்த அவர், தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கும் இளம் அதிகாரிகளிடையே கலந்துரையாடினார். ஒவ்வொருவரும் தங்களது சொந்தத் திறனில் சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தேசமும் மக்களும் வழங்கும் இந்த வாய்ப்பை குடிமைப் பணி அதிகாரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குடிமைப் பணி அதிகாரிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், துறை ரீதியிலான சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும். பல்வேறு நிலைகளில் அவற்றை விரிவுபடுத்தவும் வேண்டுகோள் விடுத்தார். உள்கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்குகள், உள்நாட்டு பாதுகாப்பு, ஊழலை அகற்றுதல், சமூக நலத் திட்டங்கள், விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான இலக்குகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார், ஒவ்வொரு துறையிலும் புதிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், இதுவரையிலான சாதனைகளை பன்மடங்கு விஞ்சி, முன்னேற்றத்திற்கு உயர் அளவிலான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த உலகில் மனிதர்களின் தீர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், குடிமைப்பணி அதிகாரிகள் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், அவர்களின் போராட்டங்களைப் புரிந்துகொண்டு அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண  முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனது உரையை நிறைவு செய்த அவர், "நாக்ரிக் தேவோ பவ" என்ற கொள்கையை "அதிதி தேவோ பவா" என்ற கொள்கையுடன் ஒப்பிட்டு, அரசுப் பணியாளர்கள்  நிர்வாகப் பணியுடன் அர்ப்பணிப்பு, கருணை, பொறுப்புகளை நிறைவேற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு சக்திகாந்த தாஸ், அமைச்சரவைச் செயலாளர் திரு டி.வி.சோமநாதன், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற  வேண்டும், பணியின் போது தங்களை திறனை வெளிப்படுத்தி சிறப்பான நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று பிரதமர் எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளார். இந்த ஆண்டு, மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி, முன்னேற விரும்பும் தொகுதிகள் திட்டம், குடிமைப் பணியாளர்களுக்கான புதுமை ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு 16 விருதுகளை பிரதமர் வழங்கினார்.

-----

(Release ID:2123113)

TS/SV/KPG/KR

 


(Release ID: 2123230) Visitor Counter : 26