விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காத்மாண்டுவில் நடைபெற்ற வேளாண் குறித்த பிம்ஸ்டெக் அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இந்தியா சார்பில் தலைமை தாங்கினார்

Posted On: 09 APR 2025 2:33PM by PIB Chennai

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற 3-வது பிம்ஸ்டெக் வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் இந்தியா பங்கேற்றது. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியான்மர், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் மற்றும் வேளாண் உயர் அதிகாரிகள் இந்த ஒருநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். வேளாண் வளர்ச்சித் துறையில் பிராந்திய ஒத்துழைப்புக்கான வாய்ப்பை இந்த சந்திப்பு வழங்கியது.

கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய வளர்ச்சி, தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான குறிப்பிடத்தக்க அமைப்பாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது. "வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு" என்பது பிம்ஸ்டெக் ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பிராந்திய விவசாய ஒத்துழைப்பை வடிவமைக்கும் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பிம்ஸ்டெக் வேளாண் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தின் மூன்றாவது கூட்டம் இதுவாகும். முதலாவது பிம்ஸ்டெக் வேளாண் அமைச்சர்கள் நிலையான கூட்டம் மியான்மரில் 2019 ஜூலை 12  அன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது கூட்டம் 2022 நவம்பர் 10 அன்று நடைபெற்றது. மூன்றாவது கூட்டத்தின்போது, மீன்வளம் மற்றும் கால்நடை ஒத்துழைப்பு உட்பட பிம்ஸ்டெக் வேளாண் துறைக்கு அதிக உத்வேகம் அளிப்பது மற்றும் வழிவகைகளை உருவாக்குவது குறித்து வேளாண் அமைச்சர்கள் விவாதித்தனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய திரு சிவ்ராஜ் சிங் சவுகான்,  இந்தியா தனது முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளான 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' மற்றும் 'கிழக்கு நோக்கிய கொள்கை' ஆகியவற்றை நிறைவேற்ற பிம்ஸ்டெக் இயற்கையான தேர்வாகும் என்று கூறினார். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் திறன் பிம்ஸ்டெக் அமைப்புக்கு உள்ளது. நம்மிடையே பகிரப்பட்ட வரலாறு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் உள்ளது, இது நம்மை இயற்கையான கூட்டாளிகளாக ஆக்குகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம், நிறுவனக் கடன், மண் வள அட்டை, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், பயிர்க் காப்பீடு, பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதற்கான நமோ ட்ரோன் சகோதரி திட்டம் போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்தியா செயல்படுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இயற்கை வேளாண்மையும் ஊக்குவிக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2120337)
TS/IR/RR


(Release ID: 2120389) Visitor Counter : 29