ஆயுஷ்
உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி மாநாட்டை காந்திநகரில் தொடங்கி வைக்கிறார் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ்
Posted On:
08 APR 2025 5:08PM by PIB Chennai
உலக ஹோமியோபதி தினம் 2025-ஐ முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் இரண்டு நாள் மாநாடு நடைபெறவுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டை ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், தேசிய ஹோமியோபதி ஆணையம், தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகியவை இணைந்து 2025 ஏப்ரல் 10-11 ஆகிய தேதிகளில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாடு - கண்காட்சி மையத்தில் நடத்துகின்றன. இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஹோமியோபதியின் வளர்ச்சிக்கான மூன்று அடிப்படைத் தூண்களை எடுத்துரைக்கிறது.
மத்திய ஆயுஷ் இணையமைச்சர்(தனிப்பொறுப்பு) திரு பிரதாப் ராவ் ஜாதவ், மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 10,000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஹோமியோபதி வரலாற்றில் மிகப்பெரிய மாநாடாக அமையும்.
ஹோமியோபதி ஆராய்ச்சி, முன்னேற்றங்கள், நடைமுறை பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான உலகளாவிய விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் உலக ஹோமியோபதி தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த ஆண்டு காந்திநகரில் நடத்தப்படும் இந்த மாநாடு கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை வல்லுநர்களை ஒருங்கிணைந்த தளத்தில் இணைக்கிறது.
கடந்த ஆண்டு, புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமையில் ஹோமியோபதி தின நிகழ்ச்சி நடைபெற்றது. 2023-ம் ஆண்டில், ஹோமியோபதி தின நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த ஆண்டு காந்திநகரில் கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஹோமியோபதி மருத்துவ முறைகளை பிரபலப்படுத்தவும், அதன் எதிர்கால போக்கை வகுக்கவும் இந்த மாநாடு உதவும்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2120130)
Visitor Counter : 30