பிரதமர் அலுவலகம்
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
04 APR 2025 2:55PM by PIB Chennai
பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவரான மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.04.2025) சந்தித்தார்.
மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிலைமை குறித்தும், மியான்மருக்கு மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்குவதற்காக "ஆபரேஷன் பிரம்மா" திட்டத்தின் கீழ் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவின் உதவி சார்ந்த முன்முயற்சிகளுக்கு மியான்மரின் மூத்த ஜெனரல் தமது நன்றியைத் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மருக்கு முதலில் உதவும் நாடு என்ற முறையில் இந்தியா துணை நிற்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் பல பொருள் உதவிகளையும் பிற உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நம்பகத்தன்மை வாய்ந்த தேர்தல்கள் மூலம் மியான்மரில் ஜனநாயக செயல்முறையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். அமைதியான, நிலையான, ஜனநாயக ரீதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை இந்தியா ஆதரிப்பதாகப் பிரதமர் கூறினார். மியான்மரில் நடந்து வரும் இனக்கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனித இழப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மோதலுக்கு ராணுவ ரீதியான தீர்வு இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன், நீடித்த அமைதியை, அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்றும் கூறினார்.
மியான்மர்-தாய்லாந்து எல்லையில் இணைய மோசடிகளில் இருந்து இந்தியப் பிரஜைகளை மீட்டு திருப்பி அனுப்ப மியான்மர் அளித்த ஆதரவை பிரதமர் பாராட்டினார். இந்தியா-மியான்மர் எல்லையில் தீவிரவாத நடவடிக்கைகள், நாடுகடந்த குற்றங்கள், மனித கடத்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதில் ஒத்துழைத்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
மியான்மரில் இந்தியா உதவியுடன் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். மியான்மரில் உள்ள அனைத்து சமூகங்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார்.
******
(Release ID: 2118719)
TS/PLM/KPG/SG/DL
(Release ID: 2118995)
Visitor Counter : 13
Read this release in:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam