குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் குடியரசுத்தலைவர்

Posted On: 24 MAR 2025 6:10PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று பிற்பகல் (மார்ச் 24, 2025) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றடைந்தார்.

புவனேஸ்வரில் இருந்து நயாகர் சென்ற குடியரசுத்தலைவர், நீலமாதவ பகவான் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர், கலியப்பள்ளியில் பாரதிய பிஸ்வபாசு சாபர் சமாஜத்தின் நிறுவன நாள் விழாவில் அவர் கலந்து கொண்டார்.

கலியப்பள்ளியில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், இந்தப் பகுதியில் உள்ள இயற்கைக் காட்சிகள் மிகவும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளதென்று பாராட்டினார். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளையும், யாத்ரீகர்களையும் வெகுவாக ஈர்க்க முடியும் என்று அவர் கூறினார். இதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களின்  பொருளாதார மேம்பாட்டுக்கு உதவ முடியும்  என்றும், எனவே இப்பகுதியை சுற்றுலாத்  தலமாக மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விவசாயம், கைவினைப் பொருட்கள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் நயாகர் நகரின் வாய்ப்புகளை உருவாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இயற்கை சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை என்பது நம் நாட்டின் கலாச்சார சிறப்பு என்று குடியரசுத்தலைவர் கூறினார். இது பழங்குடியின மக்களின் வாழ்க்கையுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பழங்குடியின மக்கள் காடுகள், மரங்கள் போன்றவற்றை தெய்வங்களாகக் கருதி வழிபடுவதாகவும், அவர்களது மூதாதையர்களின் ஆன்மாக்கள் காடுகளில் வசித்து வருவதாக நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பழங்குடியின மக்களின் கலை, கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் அதே வேளையில், அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தற்சார்பு சூழலை ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

----

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2114573) Visitor Counter : 26