குடியரசுத் தலைவர் செயலகம்
பதிண்டா எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
11 MAR 2025 5:56PM by PIB Chennai
பதிண்டாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இன்று (மார்ச் 11, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மக்களுக்கு எய்ம்ஸ் என்றால் சிறந்த மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பது என்றும், மாணவர்களுக்கு எய்ம்ஸ் என்றால் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பான வசதிகள் என்றும் அர்த்தம் ஆகிறது என்று கூறினார். குறைந்த செலவில் சுகாதாரச் சேவையை வழங்கவும், மருத்துவத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்தவும், நாட்டில் பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எய்ம்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்கள் சிகிச்சையுடன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். 750 படுக்கை வசதிகளைக் கொண்ட பதிண்டாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியானது பல்வேறு சிறப்பு மற்றும் உயர் சிறப்புத் துறைகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு முழுமையான சுகாதார சேவையை வழங்கி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பதிண்டா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் அனைத்து தரப்பினரும் தங்களது ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவை மூலம் இதனை மண்டல மருத்துவ சிறப்பு மையமாக மேம்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். உலகளாவிய மற்றும் உள்ளூர் சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்கள் ஆராய்ச்சியின் கவனம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நமது சமூகத்தில் மருத்துவர்களுக்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஒரு மருத்துவர் தொழில்முறை திறன் மற்றும் இரக்கம், கருணை மற்றும் அனுதாபம் போன்ற மனித மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தார்மீகப் பொறுப்பை மருத்துவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஒரு மருத்துவ நிபுணராக, பல நேரங்களில் அவர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கடந்து செல்வார்கள் என்று அவர் கூறினார். அந்தச் சவால்களை எதிர்கொள்ள அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுமாறும், சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறும், யோகா மற்றும் உடற்பயிற்சியை அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் என்று அவர் கூறினார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2110412)
Visitor Counter : 15