பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் குஜராத்திலும் மார்ச் 7 - 8 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

சில்வாசாவில், யூனியன் பிரதேசத்திற்கு, ரூ.2,580 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்

சில்வாசாவில் நமோ மருத்துவமனையை (கட்டம் I) பிரதமர் திறந்து வைக்கிறார்

சூரத்தில் சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன்களை 2.3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு விநியோகிக்கிறார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரி நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார்

நவ்சாரியில் ஜி-சஃபால் (அந்த்யோதயா குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான குஜராத் திட்டம்), ஜி-மைத்ரி (குஜராத் கிராமப்புற வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தனிநபர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்) ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 07 MAR 2025 7:09AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி,  தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும்  குஜராத்துக்கும் இன்றும் நாளையும் (மார்ச் 7 - 8 தேதிகளில்) பயணம் மேற்கொள்கிறார். இன்று சில்வாசாவுக்கு செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் நமோ மருத்துவமனையைத் (கட்டம் I) திறந்து வைப்பார். பிற்பகல் 2:45 மணியளவில், சில்வாசாவில் யூனியன் பிரதேசத்திற்கான ரூ.2580 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், அவர் சூரத் செல்கிறார்.  மாலை 5 மணியளவில், சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தைத் தொடங்கிவைப்பார். மார்ச் 8 ஆம் தேதி, பிரதமர் நவ்சாரிக்குச் செல்கிறார், காலை 11:30 மணியளவில், லட்சாதிபதி சகோதரிகளுடன் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும்  பொது நிகழ்வு நடைபெறும்.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ பகுதிகளில் பிரதமர்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பிரதமரின் முதன்மையான குறிக்கோளாக இருந்து வருகிறது. இதன்படி, சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவமனையை (கட்டம் I) அவர் திறந்து வைப்பார். 460 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, யூனியன் பிரதேசத்தில் சுகாதார சேவைகளை கணிசமாக வலுப்படுத்தும். இது இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகங்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்கும்.

பிரதமர் சில்வாசாவில் ரூ.2580 கோடிக்கும் அதிக மதிப்பில்  யூனியன் பிரதேசத்திற்கான பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். இதில் பல்வேறு கிராமச் சாலைகள் மற்றும் பிற சாலை உள்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், பஞ்சாயத்து மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் இணைப்பை மேம்படுத்துதல், தொழில்துறை வளர்ச்சியை, சுற்றுலாவை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பிராந்தியத்தில் பொதுநல முயற்சிகளை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளன. வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில்  பணி நியமனக் கடிதங்களைப்  பிரதமர் வழங்குவார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் -  கிர் முன்மாதிரி வாழ்வாதாரத் திட்டம்  மற்றும் சில்வான் சகோதரி ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அவர் பலன்களையும் வழங்குவார்.

கிர் முன்மாதிரி வாழ்வாதாரத் திட்டம் என்பது சிறிய பால் பண்ணைகள் அமைத்து, அவர்களின் வாழ்க்கையில் சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம், இப்பகுதியில் உள்ள ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின் பொருளாதார அதிகாரத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சில்வன் சகோதரி திட்டம் என்பது பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் இணை நிதியுதவியுடன், அழகியலுடன் வடிவமைக்கப்பட்ட வண்டிகளை வழங்குவதன் மூலம், சாலையோர வியாபாரத்தில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

குஜராத்தில் பிரதமர்

மார்ச் 7 ஆம் தேதி, சூரத்தின் லிம்பாயத்தில் சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை  தொடங்கி வைப்பார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2.3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பலன்களை விநியோகிப்பார்.

அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமானதாக  இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, அவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கி நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதன்படி, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று, நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வான்சி போர்சி கிராமத்தில் நடைபெறும் லட்சாதிபதி சகோதரி  நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று லட்சாதிபதி சகோதரிகளுடன் உரையாடுவார். மேலும், 5 லட்சாதிபதி சகோதரிகளுக்கும் லட்சாதிபதி சகோதரி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுவார்.

நவ்சாரியில் குஜராத் அரசின் ஜி-சஃபால் (ஏழைஎளிய குடும்பங்களுக்கான வாழ்வாதார குஜராத் திட்டம்), ஜி-மைத்ரி (குஜராத் கிராமப்புற வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தனிநபர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும்  ஊக்கப்படுத்துதல்) ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைப்பார்.

கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு உகந்த சூழலை உருவாக்கப் பாடுபடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜி-மைத்ரி திட்டம் நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கும்.

குஜராத்தில் முன்னேறவிரும்பும்  இரண்டு மாவட்டங்கள் மற்றும் முன்னேறவிரும்பும் பதின்மூன்று ஒன்றியங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியை ஜி-சஃபால் வழங்கும்.

***

(Release ID: 2108964)

TS/SMB/RJ


(Release ID: 2109134) Visitor Counter : 26