குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டு நாள் பல்கலைக்கழகத் தலைமைப் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நிறைவடைந்தது

Posted On: 04 MAR 2025 5:42PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டு நாள் பல்கலைக்கழகத் தலைமைப் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று (மார்ச் 4, 2025) நிறைவடைந்தது.

மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றின் முடிவுகள் - குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் தமது நிறைவுரையில், இந்த நூற்றாண்டின் முதல் பாதியின் இறுதிக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது தேசிய இலக்கு என்று கூறினார். இந்த இலக்கை அடைய, கல்வி நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் மற்றும் மாணவர்களும் உலகளாவிய மனநிலையுடன் முன்னேற வேண்டும். சர்வதேசமயமாக்கல் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், 21-ம் நூற்றாண்டில் இளம் மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ள அடையாளத்தை உருவாக்குவார்கள். நமது உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி கிடைப்பதானது வெளிநாடுகளுக்குப்போய் படிக்கும் போக்கைக் குறைக்கும். நமது இளைஞர்களின் திறமைகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். தன்னம்பிக்கை என்பது உண்மையிலேயே வளர்ந்த, பெரிய மற்றும் வலுவான பொருளாதாரத்தின் அடையாளமாகும். ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கையானது நமது நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இத்தகைய ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் தர வேண்டும். வளர்ந்த பொருளாதாரங்களில், கல்வி-தொழில் இடைமுகம் வலுவாகத் தோன்றுகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். தொழில் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான பரிமாற்றம் காரணமாக, ஆராய்ச்சிப் பணிகள் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் தேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பரஸ்பர நலனுக்காக தொழில்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது ஆராய்ச்சிப் பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார். மேலும், கல்வி நிறுவனங்களின் ஆய்வகங்களை உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளுடன் இணைப்பது அவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர்  கேட்டுக் கொண்டார்.

மாணவர்களின் சிறப்புத் திறமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அமைப்பு சார்ந்த மற்றும் நெகிழ்வான கல்வி முறையைக் கொண்டிருப்பது கட்டாயமானது மற்றும் சவாலானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தச் சூழலில், தொடர்ந்து விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் பொருத்தமான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பது அத்தகைய மாற்றங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு நாடு வலிமை பெறுவது மற்றும் வளர்ச்சியடைவது என்பது குணநலன்கள், விவேகம் மற்றும் திறமையான இளைஞர்களின் பலத்தால் மட்டுமே என்று குடியரசுத் தலைவர் கூறினார். கல்வி நிறுவனங்களில், நமது இளம் மாணவர்களின் குணம், விவேகம் மற்றும் திறன் ஆகியவை வளர்க்கப்படுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உயர்கல்வியின் பெருமைமிக்க லட்சியங்களை அடைவார்கள் என்றும், இந்தியத் தாயின் இளம் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

TS/PKV/AG/DL


(Release ID: 2108190) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Malayalam