கூட்டுறவு அமைச்சகம்
பால்வளத் துறையில் நிலைத்தன்மை குறித்த பயிலரங்கு - புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2025 7:29PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறக அமைச்சருமான திரு அமித் ஷா நாளை (2025 மார்ச் 3) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பால்வளத் துறையில் நிலைத்தன்மையும் சுழற்சித் தன்மையும் குறித்த பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் அதே வேளையில், நிலையான பால் பண்ணைத் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. கூட்டுறவு அமைச்சகம், கால்நடை பராமரிப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கொள்கைகள், முயற்சிகளில் இந்த பயிலரங்கு கவனம் செலுத்தும். சுழற்சித் தன்மை என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாகும். இது கிடைக்கக்கூடிய வளங்களை சூழல் நட்புடன் பயன்படுத்துவதிலும், பொருட்களின் மறுபயன்பாடு, மீளுருவாக்கம், மறுசுழற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
பல்வேறு மாநிலங்களில் உயிரி எரிவாயு ஆலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடுதல், பால் பண்ணையில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடுதல் உள்ளிட்டவையும் இந்த பயிலரங்கில் இடம்பெறும். பால் கழிவுகளை உயிரிவாயு, அழுத்தப்பட்ட உயிரிவாயு, கரிம உரங்களாக மாற்றும் நிலையான உர மேலாண்மை மாதிரிகள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகளையும் இந்த பயிலரங்கு கொண்டிருக்கும்.
இந்தப் பயிலரங்கை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்கும் பங்கேற்கிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச் சூழல் வனத்துறை, பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு, ரசாயனம் - உரங்கள், ஜல் சக்தி உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
***
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2107600)
வருகையாளர் எண்ணிக்கை : 78