உள்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் தில்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
28 FEB 2025 7:02PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இன்று தில்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, தில்லி அரசின் உள்துறை அமைச்சர் திரு ஆஷிஷ் சூட், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், தில்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தின் போது, பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. தில்லி காவல்துறையின் செயல்திறனை மறுஆய்வு செய்த உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தில்லி காவல்துறை சிறப்பாக பணியாற்றியுள்ளது என்றார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, வளர்ச்சியடைந்த மற்றும் பாதுகாப்பான தில்லியை உருவாக்க இரட்டை என்ஜின் அரசு இரட்டிப்பு வேகத்தில் செயல்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழையவும், அவர்களின் ஆவணங்களைப் பெறவும், இங்கு தங்குவதற்கு உதவவும் ஆதரவளிக்கும் முழு இணைப்பிற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தில்லி காவல்துறைக்கு அறிவுறுத்தினர். சட்டவிரோத ஊடுருவல்காரர்களின் பிரச்சினையும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றும், இது கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்றும், அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செயல்படத் தவறும் காவல் நிலையங்கள் மற்றும் உட்பிரிவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார். காவல்துறை அனுமதி சான்றிதழ், பண்புநலன் சரிபார்ப்பு, போக்குவரத்து மேலாண்மை, மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஹிம்மத் செயலி போன்ற மூன்றாம் தரப்பு கணக்கெடுப்புகள் மூலம் தில்லி காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மக்களின் திருப்தி அளவை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். மூன்றாம் தரப்பினரின் மதிப்பாய்வு இந்த முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107051
*****
(Release ID: 2107051)
RB/DL
(Release ID: 2107144)
Visitor Counter : 19