பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற ஜுமோயிர் பினாந்தினி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

Posted On: 24 FEB 2025 8:17PM by PIB Chennai

அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று நடைபெற்ற  ஜுமோயிர் பினாந்தினி  (மெகா ஜுமோயிர்) 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்ச்சியில் ஆற்றல், உற்சாகம் மற்றும் எழுச்சி நிறைந்த ஒரு சூழல் இருந்தது என்றார். தேயிலைத் தோட்டங்களின் நறுமணத்தையும் அழகையும் பிரதிபலிக்கும் ஜுமோயிர் கலைஞர்களின் ஈர்க்கக்கூடிய தயாரிப்புகளையும் அவர் குறிப்பிட்டார். ஜுமார் மற்றும் தேயிலைத் தோட்ட கலாச்சாரத்துடன் மக்களுக்கு ஒரு சிறப்பு பிணைப்பு இருப்பதைப் போலவே, தானும் அதேபோன்ற தொடர்பைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இன்று ஜுமார் நடனத்தை நிகழ்த்தும் இவ்வளவு அதிக  எண்ணிக்கையிலான கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்துவார்க என்று அவர் மேலும் கூறினார். 2023-ஆம் ஆண்டில் அசாம் சென்றபோது, 11,000 கலைஞர்கள் பிஹு நடனத்தை நிகழ்த்தி சாதனை படைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அது தனக்கு மறக்க முடியாத நினைவாக இருந்தது என்றும், இதேபோன்ற கண்கவர் நிகழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், அதன் முதல்வருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். தேயிலை சமூகத்தினரும், பழங்குடியின மக்களும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதால் அசாமுக்கு இன்று பெருமை சேர்க்கும் நாள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிறப்பு நாளில் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகள் அசாமின் பெருமைக்கு ஒரு சான்று மட்டுமல்ல, இந்தியாவின் பெரும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது என்று குறிப்பிட்டார். இப்போது, தாமே வடகிழக்கு கலாச்சாரத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறியிருப்பதை அவர் எடுத்துரைத்தார். அசாம் மாநிலம் காசிரங்காவில் தங்கியிருந்து, அதன் பல்லுயிர் பெருக்கத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை தாம் பெற்றிருப்பதாக  அவர் குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு, அசாமிய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது என்றும், இது  அசாம் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்துவந்த அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் சராய்டியோ மொய்தம் சேர்க்கப்பட்டிருப்பது, அரசின் முயற்சிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று அவர் கூறினார்.

முகலாயர்களுக்கு எதிராக அசாமின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்த துணிச்சலான போர்வீரர் லச்சித் போர்புகனின் பெருமை குறித்துப் பேசிய திரு மோடி, லச்சித் போர்புகனின் 400-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்தை எடுத்துரைத்தார். அசாமில் 125 அடி உயரமுள்ள லச்சித் போர்புகனின் வெண்கல சிலை நிறுவப்பட்டிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியின சமுதாயத்தின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் பழங்குடியினர் கௌரவ தினம்  கொண்டாடப்படத் தொடங்கியதையும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியின வீரர்களின் பங்களிப்பு  அழியாத வகையில் நாடு முழுவதும் பழங்குடியின அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்கள் அரசு அசாமை மேம்படுத்தி 'தேயிலை பழங்குடியினர்' சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அசாம் தேயிலைக் கழக தொழிலாளர்களுக்கு அவர்களின் வருமானத்தை அதிகரிக்க போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார். தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் சுமார் 1.5 லட்சம் பெண்களின் நிதி பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கர்ப்ப காலத்தில்  அவர்களுக்கு ரூ.  15,000 வழங்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். கூடுதலாக, குடும்பங்களின் ஆரோக்கியத்திற்காக தேயிலைத் தோட்டங்களில் 350 க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை அசாம் அரசு திறக்கிறது. தேயிலை பழங்குடியின குழந்தைகளுக்காக 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேயிலைத் தோட்டப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். தேயிலை பழங்குடியின இளைஞர்களுக்கு ஓ.பி.சி ஒதுக்கீட்டில் 3% இடஒதுக்கீடு மற்றும் அசாம் அரசு வழங்கும் சுய வேலைவாய்ப்புக்கு ரூ .25,000 உதவித் தொகை  வழங்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். தேயிலைத் தொழில் மற்றும் அதன் தொழிலாளர்களின் வளர்ச்சி, அசாமின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உந்துதல் அளித்து, வடகிழக்குப் பகுதியை புதிய நிலைக்கு உயர்த்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

அசாம் ஆளுநர் திரு. லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, மாநில முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், திரு. சர்பானந்த சோனோவால், திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மத்திய இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

ஜுமோயிர் பினாந்தினி  (மெகா ஜுமோயிர்) 2025, 8,000 கலைஞர்கள் பங்கேற்கும் ஒரு கண்கவர் கலாச்சார களியாட்டமாகும், இது அசாமின் தேயிலை பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி சமூகங்களின் நாட்டுப்புற நடனமாகும். இது உள்ளடக்கம், ஒற்றுமை மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றின் உணர்வை உள்ளடக்கியது மற்றும் அசாமின் ஒத்திசைவு கலாச்சார கலவையைக் குறிக்கிறது. மெகா ஜுமோயிர் நிகழ்வு தேயிலைத் தொழிலின் 200 ஆண்டுகளையும், அசாமில் தொழில்மயமாக்கலின் 200 ஆண்டுகளையும் குறிக்கிறது.

 

***

RB/DL


(Release ID: 2105962) Visitor Counter : 11