கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சரக்குகளின் எடை, அளவுகளின் போக்கு நிலைகள்
Posted On:
05 FEB 2025 1:37PM by PIB Chennai
பெரிய துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகளின் அளவு 2023-24-ம் நிதியாண்டில் 819.23 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2014-15-ம் ஆண்டில் 581.34 மில்லியன் டன்னாக இருந்தது. இது உலகளவிலான அளவைக் காட்டிலும், 3.5% கூடுதலாகும். 2023-24 ம் நிதியாண்டில், கையாளப்பட்ட சரக்குகளில் 33.80% திரவ வடிவிலும், 44.04% உலர் சரக்குகளாகவும், 22.16% கொள்கலன் சரக்குகளாகவும் இருந்தன. பெரிய துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கையாளும் திறன் அதிகரிப்பு ஆகியவை தொடர் நடவடிக்கையாகும். புதிய கப்பல் நிறுத்துமிடங்கள், முனையங்களை கட்டமைத்தல், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கப்பல் நிறுத்துமிடங்கள், முனையங்களை இயந்திரமயமாக்குதல், பெரிய கப்பல்கள் வந்துசெல்லும் வகையில், துறைமுகப் பகுதிகளை ஆழப்படுத்துவதற்கான அகழ்வாராய்ச்சிப் பணிகள், சாலை, ரயில் போக்குவரத்திற்கான இணைப்பை மேம்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். மேலும், வருங்கால தலைமுறைக்கான பெரிய அளவிலான கொள்கலன் கப்பல்களைக் கையாளும் செயல்திறனை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மேம்பாட்டுப்பணிகள் அமையும். மகாராஷ்டிராவில் உள்ள வாதவன் துறைமுகம் நாட்டின் மிகப்பெரிய கொள்கலன்களை கையாளும் துறைமுகமாக மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய துறைமுகங்கள், மாநில கடல்சார் வாரியங்கள், ரயில்வே அமைச்சகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின், பெரிய மற்றும் சிறிய அளவிலான துறைமுகங்களை எளிதில் அணுகும் வகையில், 107 சாலை, ரயில் போக்குவரத்து இணைப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகள் அடையாளம் காணப்பட்டு, 2022 செப்டம்பர் மாதத்தில் மத்திய தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தயாரித்த விரிவான துறைமுக இணைப்புத் திட்டத்தில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் துறைமுகங்கள், உள்நாட்டு உற்பத்தி / நுகர்வு மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சரபானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2099963)
TS/SV/AG/KR
(Release ID: 2099987)
Visitor Counter : 20