நிதி அமைச்சகம்
நிதியாண்டு 20 மற்றும் நிதியாண்டு 25க்கும் இடையில் முக்கிய உள்கட்டமைப்பு துறைகளுக்கான அரசு மூலதனச் செலவு 38.8 சதவீதமாக வளர்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25
प्रविष्टि तिथि:
31 JAN 2025 2:03PM by PIB Chennai
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளுக்கான மத்திய அரசின் மூலதனச் செலவு 2019-20 முதல் 2023-24 வரை 38.8% என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், 2024 ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மூலதன செலவினம் வேகம் பெற்றது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை வலைப்பின்னல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. நிறுவப்பட்ட திறன் ஆண்டுக்கு ஆண்டு 7.2% அதிகரித்து நவம்பர் 2024 நிலவரப்படி 456.7 ஜிகாவாட்டாக உள்ளது. உருமாற்ற திறனின் சேர்க்கையும் இந்த ஆண்டில் வேகம் பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய மாற்றத்தில், பெரும்பாலும் பெரிய அளவிலான சூரிய மற்றும் காற்றாலை முயற்சிகளால் மின்சாரத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2024 இறுதிக்குள், நாட்டின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் ஆண்டுக்கு ஆண்டு 15.8% அதிகரித்து, 209.4ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது டிசம்பர் 2023 இல் 180.8 ஜிகாவாட்டாக இருந்தது.
கிராமப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, பாதுகாப்பான குடிநீரை வழங்குவதன் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்வதை ஜல் ஜீவன் இயக்கம் (ஜே.ஜே.எம்) நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2019-இல் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய்வழிக் குடி நீர் இணைப்புகள் இருந்தன. நவம்பர் 26, 2024 நிலவரப்படி, மொத்தம் உள்ள சுமார் 19.34 கோடி கிராமப்புற குடும்பங்களில் 15.30 கோடிக்கும் அதிகமானவை (79.1%) இந்த வசதியைப் பெற்றுள்ளன.
கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை (ஓ.டி.எஃப்) எட்டப்பட்டது. கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம் 2020-21 முதல் 2024-25 வரை செயல்படுத்தப்படுகிறது, இது கிராமங்களை ஓ.டி.எஃப் நிலையிலிருந்து ஓ.டி.எஃப்+ நிலைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 2024 ஏப்ரல் முதல் நவம்பர் வரை, மாதிரி வகைப்பாட்டின் கீழ் 1.92 லட்சம் கிராமங்கள் ஓ.டி.எஃப்+ஆக அறிவிக்கப்பட்டன, இதன் மூலம் மொத்த ஓ.டி.எஃப்+ கிராமங்களின் எண்ணிக்கை 3.64 லட்சமாக அதிகரித்துள்ளது.
நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கமும் உணரப்பட்டது. என்.எஸ்.எஸ் -15 இன் 78 வது சுற்று அறிக்கையின்படி, நகர்ப்புறங்களில் 97 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் நிலவரப்படி, கட்டப்பட்டுள்ள தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 63.7 லட்சமாகவும், சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளின் எண்ணிக்கை 6.4 லட்சமாகவும் உள்ளது. நகராட்சி திடக்கழிவுகளை 100 சதவீதம் வீடு வீடாகச் சேகரிக்கும் வார்டுகளின் எண்ணிக்கை 93,756 ஆக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097902
TS/BR/KR
(Release ID: 2097902)
***
(रिलीज़ आईडी: 2098062)
आगंतुक पटल : 81