பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

Posted On: 31 JAN 2025 11:17AM by PIB Chennai

நண்பர்களே,

பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கமான இன்று செல்வத்தின் கடவுளான லட்சுமிதேவிக்கு நான் தலைவணங்குகிறேன். இத்தகைய தருணங்களில் பல நூற்றாண்டுகளாக லட்சுமி தேவியின்  மாண்புகளை நாம் நினைவுகூர்ந்து வருகிறோம். லட்சுமிதேவி நமக்கு வெற்றியையும், ஞானத்தையும், செல்வத்தையும், நல்வாழ்வையும் வழங்குகிறார். நாட்டின் ஏழை மக்கள், நடுத்தர சமூகத்தினருக்கு அன்னை லட்சுமிதேவி சிறப்பு ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும் என்று  நான் பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

நமது குடியரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இது மகத்தான பெருமிதமான விஷயமாகும். இந்தியாவின் இந்த வலிமை ஜனநாயக உலகில் அதற்கு சிறந்த இடத்தை உருவாக்கியுள்ளது.

நண்பர்களே,

நாட்டு மக்கள் எனக்கு 3-வது முறையாக இந்தப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த  3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழுமையான பட்ஜெட் இதுவாகும். 2047-ல் நாடு சுதந்திரத்தின் 100-வது ஆண்டினை கொண்டாடும் போது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்ற இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, புதிய சக்தியையும் அளிக்கும். நாட்டின்  140 கோடி மக்கள் தங்களின் கூட்டு முயற்சி மூலம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். 3-வது பதவிக்காலத்தில் புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாக அல்லது பல்வேறு பொருளாதார சூழ்நிலைகளிலும், நாட்டின் அனைத்துவகையான வளர்ச்சிக்கும் இயக்க ரீதியில் நாம் முன்னேறி வருகிறோம். புதிய கண்டுபிடிப்பு, அனைவரையும் உள்ளடக்குதல், முதலீடு போன்றவை நமது பொருளாதாரச் செயல்பாட்டு திட்டங்களுக்கான அடிப்படையாகும்.

எப்போதும் போல் இந்தக் கூட்டத் தொடர் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்களை கொண்டிருக்கும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும். ஏராளமான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்  இயற்றப்படும் சட்டங்கள் நாட்டின் பலத்தை அதிகரிக்கும். குறிப்பாக அனைத்துப் பெண்களும் சாதி, மத பாகுபாடு இல்லாமல் மதிப்புமிக்க வாழ்க்கையைப் பெறுவதை உத்தரவாதம் செய்யவும் சம உரிமைகள் பெறவும், மகளிர் சக்தியின் பெருமிதத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கும் இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.  சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் மூன்றும் முக்கியம். அதிவேகமாக வளர்ச்சியை எட்டுவதற்கு நாம் சீர்திருத்தத்திற்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது கூடவே பொதுமக்கள் பங்கேற்பும் இருந்தால் மாற்றத்தை நம்மால் காண முடியும்.

நமது நாடு இளமையான நாடு. இன்று  இளையோர் சக்தியாக இருப்பவர்கள் 20-லிருந்து, 25- வயது வரையானவர்கள். இவர்கள் 45-லிருந்து 50 வயதை எட்டும்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை முழுமையடையச் செய்வதில் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் மேற்கொள்ளும் கடின உழைப்பே அவர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

விடுதலைப் போராட்டத்தில் 1930 இல்,1942-இல் இணைந்தவர்கள் ஒட்டுமொத்த தேசத்தின் இளைஞர்களாக இருந்தனர். அதன் பயனை 25 ஆண்டுகளுக்குப் பின்வந்த தலைமுறையினர் அனுபவித்தனர். சுதந்திரம் அடைவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றார்கள். அதேபோல் வரவிருக்கும் 25 ஆண்டுகள் வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவது நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை வலுப்படுத்துவதை நோக்கி பங்களிப்பு செய்வார்கள். குறிப்பாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாகும். ஏனெனில்  அவையில் அதிக விழிப்புணர்வோடும் அதிகப் பங்கேற்புடனும் இருந்தால், அவர்கள் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பலன்களை அவர்களே தங்களின் கண்களால் பார்க்க முடியும்.  எனவே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது விலைமதிப்பற்ற வாய்ப்பாகும்.

நண்பர்களே,

இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரில் நாட்டின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு நாங்கள் உயிரோட்டம் தரமுடியும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குறிப்பாக ஊடகவியலாளர்களாகிய நீங்கள் நிச்சயம் அதை கவனித்திருப்பீர்கள்.  2014 முதல் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஏதாவது ஒரு பொறி கிளம்பும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் தூண்டப்படாத செயல் இல்லாத முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடராக இருக்கிறது. 2014 முதல் கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு அமர்வின் போதும் விஷமத்தனங்களை உருவாக்கத் தயாராக இருப்பார்கள். சிலர் அதை பரப்புவார்கள் என்பதைக் கவனித்து வந்திருக்கிறேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எந்த வெளிநாட்டில் இருந்தும் பிரச்சினை  கிளம்பாத முதலாவது  கூட்டத் தொடராக  இது அமைந்துள்ளது.

மிக்க நன்றி நண்பர்களே

***

(Release ID: 2097810)

TS/SMB/AG/KR


(Release ID: 2097967) Visitor Counter : 41