ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மவுனி அமாவாசையையொட்டி பிரயாக்ராஜிலிருந்து 364 ரயில்கள் இயக்கப்பட்டன: திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 30 JAN 2025 6:38PM by PIB Chennai

மவுனி அமாவாசை நாளில் சங்கமத்தில் புனித நீராடியபிறகு வீடு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே பிரயாக்ராஜின் பல்வேறு நிலையங்களில் இருந்து 364 வெளியூர் ரயில்களை இயக்கியது. இது பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் போது ஒரே நாளில் இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையாகும். இதனுடன், இந்த காலகட்டத்தில் 77 உள்ளூர் ரயில்களையும் ரயில்வே துறை இயக்கியது. வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 142 ரயில்களுடன் மகா கும்பமேளாவுக்காகவே 222 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மவுனி அமாவாசை தினத்தன்று பிரயாக்ராஜிலிருந்து 364 ரயில்கள் இயக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ரயில்வே  துறையின் அனைத்து உயர் அதிகாரிகளின் குழுவும் ரயில்வே தலைமையகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து முழு நிலைமையையும் நிகழ்நேரத்தில் கண்காணித்து வருவதாகவும், மாநில அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மவுனி அமாவாசை அன்று, வட மத்திய ரயில்வே உள்ளூர், வெளியூர் உட்பட மொத்தம் 280 ரயில்களை இயக்கியது. அதே நேரத்தில் வடகிழக்கு ரயில்வே 73 ரயில்களையும், வடக்கு ரயில்வே 88 ரயில்களையும் இயக்கின. வட மத்திய ரயில்வே அதிகபட்சமாக 157 மகா கும்பமேளா சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

மேளாவின் முழு காலகட்டத்தில், 10,028 வழக்கமான ரயில்கள் மற்றும் 3400 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் உட்பட சுமார் 13,450 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுவரை, 1900-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் திட்டமிட்டபடி இயக்கப்படுவதாக ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097683

**

TS/IR/KPG/DL


(Release ID: 2097723) Visitor Counter : 17