பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு விழாவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடியது

Posted On: 22 JAN 2025 6:59PM by PIB Chennai

பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பெண் குழந்தைகளின் நலனுக்காக கடந்த 10 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துரைத்தது. பாலின சமத்துவம் என்பது கொள்கை முன்னுரிமை மட்டுமல்லாமல் சமூக நெறிமுறையும் ஆகும் என்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வையை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தனது சிறப்பு உரையில், குழந்தை பாலின விகிதம், மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள், பெண் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தனது முக்கிய உரையில், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்று கூறினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் சிறப்புரையாற்றும் போது, இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றத்தை எடுத்துரைத்தார்.

2015 ஜனவரி 22 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இந்தியாவில் குறைந்து வரும் பாலின விகிதம் மற்றும் பாலின பாகுபாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கலாச்சார மாற்றத்தை வளர்ப்பதில் இந்த திட்டம் முக்கிய கருவியாக உள்ளது.

இந்த தினத்தின் 10 வது ஆண்டு கொண்டாட்டங்கள் இன்று (ஜனவரி 22)  தொடங்கி மகளிர் தினமான மார்ச் 8 வரை தொடரும்.

***

PLM/AG/DL


(Release ID: 2095253) Visitor Counter : 18