பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்; இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த சொத்து அட்டைகள் 2.25 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது
ஸ்வாமித்வா திட்டத்தின் அணுகுமுறை கிராமப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஒற்றுமையை வளர்க்கிறது: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
Posted On:
18 JAN 2025 5:21PM by PIB Chennai
கிராமப்புற இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் சொத்து அட்டைகள் வழங்கும் விழாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2025) தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் 65 லட்சம் கிராமப்புற மக்களுக்கு சட்டப்பூர்வ உரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டன.
இந்த விநியோக விழாவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் காணொலி முறையில் கலந்து கொண்டனர்.
காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு விழாவில், 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இது ஊரக நிர்வாகம் அதிகாரமளித்தலில் முன்னெப்போதும் இல்லாத மைல்கல்லை குறிக்கிறது. இந்த விநியோக விழாவில் சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகள் பங்கேற்றனர். இத்துடன் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட மொத்த சொத்து அட்டைகளின் எண்ணிக்கை 2.25 கோடியை எட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொத்து அட்டைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது என்று விழாவில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். வெவ்வேறு மாநிலங்கள் சொத்து உரிமைச் சான்றிதழ்களை கரோனி, அதிகார் அபிலேக், சொத்து அட்டை, மல்மட்டா பத்ராக், ஆவாசியா பூமி பட்டா போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஸ்வாமித்வா அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். இன்றைய நிகழ்ச்சியில், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அட்டைகளைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், கிராமங்களில் சுமார் 2.25 கோடி மக்கள் தற்போது தங்கள் சொத்துகளுக்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்வாமித்வா திட்டத்தின் ஐந்து பயனாளிகளுடனும் பிரதமர் உரையாடினார். இத்திட்டத்தின் பயன்கள் குறித்த தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், 65 லட்சம் சொத்து அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுத் தருணம் என்றார். "கிராமம் வலுவாக இருக்கும்போது, தேசம் வலுவாக இருக்கும்" என்று மத்திய அமைச்சர் கூறினார். ஸ்வாமித்வா திட்டம் எவ்வாறு கிராமப்புற அதிகாரமளித்தலில் முக்கியமாக மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சொத்து ஆவணப்படுத்தலுக்கான இத்திட்டத்தின் ஒருமித்த அணுகுமுறையை அவர் விளக்கினார். இந்த கூட்டு நடைமுறை கிராம சொத்துகளில் தகராறுகளை கணிசமாகக் குறைத்து சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
***
PLM/KV
(Release ID: 2094082)
Visitor Counter : 40