பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


மூன்று முன்னணி கடற்படை போர்கப்பல்கள் ஈடுபடுத்தப்படுவது வலுவான, தற்சார்பு பாதுகாப்புத் துறையை உருவாக்குவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது: பிரதமர்

21-ம் நூற்றாண்டில் இந்திய கடற்படைக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கை: பிரதமர்

உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா தற்போது உருவெடுத்து வருகிறது: பிரதமர்

தற்போது உலகளவில், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான, பொறுப்பான கூட்டாளியாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்

ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான  பாதுகாப்புப் பணியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது: பிரதமர்

நிலம், நீர், காற்று, ஆழ்கடல் அல்லது எல்லையற்ற விண்வெளி எதுவாக இருந்தாலும், இந்தியா தனது நலன்களை எல்லா இடங்களிலும் பாதுகாத்து வருகிறது: பிரதமர்

Posted On: 15 JAN 2025 12:50PM by PIB Chennai

 

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு, தற்சார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு இன்று ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்தியாவில் கடற்படைக்கு புதிய பலத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் அளித்துள்ளார் என்று கூறினார். சிவாஜி மகராஜின் மண்ணில் 21-ம் நூற்றாண்டில் இந்தியக் கடற்படைக்கு அதிகாரம் அளிக்க அரசு இன்று ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். "பேரழிவைத் தரும் கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை ஒன்றாக முத்தரப்பு பணியில் ஈடுபடுத்துவது இதுவே முதல் முறை" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மூன்று முன்னணி கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதும் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சாதனைக்காக இந்தியக் கடற்படை, கட்டுமானப் பணியில் தொடர்புடைய அனைவருக்கும், இந்திய மக்களுக்கும் அவர்  வாழ்த்து தெரிவித்தார்.

"இன்றைய நிகழ்ச்சி நமது புகழ்பெற்ற பாரம்பரியத்தை நமது எதிர்கால விருப்பங்களுடன் இணைக்கிறது" என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். நீண்ட கடல் பயணங்கள், வர்த்தகம், கடற்படை பாதுகாப்பு, கப்பல் தொழில் ஆகியவற்றில் இந்தியா வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதன் மூலம் தற்போதைய இந்திய நாடு உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.  சோழ வம்சத்தின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, குஜராத்தின் துறைமுகங்கள் இந்தியாவை மேற்கு ஆசியாவுடன் இணைத்த சகாப்தத்தை நினைவூட்டும் சூரத் போர்க்கப்பல் உள்ளிட்ட புதிய கப்பல்களை தொடங்கி வைத்ததை பிரதமர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பி75 வகைப்பாட்டில் ஆறாவது வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

"உலகளவில், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான மற்றும் பொறுப்பான நட்பு நாடாக இந்தியா தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா விரிவாக்க மனப்பான்மையுடன் அல்லாமல், வளர்ச்சி உணர்வுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வெளிப்படையான, பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடலோர நாடுகளின் வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற தாரக மந்திரத்தை அறிமுகப்படுத்தி, இந்த தொலைநோக்கு பார்வையுடன்  முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜி20 தலைமைப் பொறுப்பின் போது இந்தியாவின் தலைமையை எடுத்துரைத்த திரு மோடி, "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற தாரக மந்திரத்தை ஊக்குவித்த திரு மோடி, கோவிட்- 19-க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் போது "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" என்ற இந்தியாவின் பார்வையையும் குறிப்பிட்டார். உலகை ஒரே குடும்பமாக நடத்துவதில் இந்தியாவின் நம்பிக்கையையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டையும் சுட்டிக் காட்டினார். ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பை இந்தியா தனது பொறுப்பாக கருதுகிறது என்று அவர் கூறினார்.

உலகளாவிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியலை வடிவமைப்பதில் இந்தியா போன்ற கடல்சார் நாடுகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், பிராந்திய நீர்நிலைகளைப் பாதுகாப்பது, சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வது, பொருளாதார முன்னேற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்காக வர்த்தக விநியோக வழிகள், கடல் பாதைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பயங்கரவாதம், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இருந்து பிராந்தியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கடல்களை பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாற்றுவதிலும், சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதிலும், கப்பல் தொழிலுக்கு ஆதரவளிப்பதிலும் உலகளாவிய கூட்டாளிகளாக மாறுவதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். அரிய தாதுக்கள், மீன் உள்ளிட்ட  கடல் வாழ் உயிரினங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அவற்றை நிர்வகிக்கும் திறனை வளர்க்கவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடல்வழித் தகவல் தொடர்புகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திசையில் இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது" என்று கூறினார். சமீபத்திய மாதங்களில், இந்திய கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களையும்,  ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள தேசிய மற்றும் சர்வதேச சரக்குகளையும் பாதுகாத்துள்ளது. இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீதான உலகளாவிய நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலை மற்றும் திறன்களே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்வின் ராணுவம் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட  திரு மோடி, "அது நிலம், நீர், காற்று, ஆழ்கடல் அல்லது எல்லையற்ற விண்வெளியாக இருந்தாலும், இந்தியா தனது நலன்களை எல்லா இடங்களிலும் பாதுகாத்து வருகிறது" என்று எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியை நியமிப்பது உட்பட தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார் .

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆயுதப் படைகள் தற்சார்பு முறையை ஏற்றுக்கொண்டதை ஒப்புக் கொண்ட பிரதமர், நெருக்கடிகளின் போது மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான சிறந்த முயற்சிகளைப் பாராட்டினார். எதிர்காலத்தில் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படாது என்றும், இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பிரிவில் 5,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஆயுதப்படையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி இந்திய வீரர்களின் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தித் தொழிற்சாலை கர்நாடகாவில் அமைக்கப்பட்டிருப்பதையும், ஆயுதப்படைகளுக்கான போக்குவரத்து விமானத் தொழிற்சாலை குறித்தும் திரு மோடி குறிப்பிட்டார். தேஜஸ் போர் விமானத்தின் சாதனைகள் மற்றும் உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்களின் மேம்பாடு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். அவை பாதுகாப்பு உற்பத்தியை துரிதப்படுத்துகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை கடற்படை கணிசமாக விரிவுபடுத்தியதற்கு திருப்தி தெரிவித்த பிரதமர், மசாகான் கப்பல் கட்டும் தளத்தின் முக்கிய பங்களிப்பையும் அங்கீகரித்தார். கடந்த பத்தாண்டுகளில் கடற்படையில் 33 கப்பல்களும், 7 நீர்மூழ்கிக் கப்பல்களும் சேர்க்கப்பட்டுள்ளதையும், 40 கடற்படைக் கப்பல்களில் 39 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார். இதில் கம்பீரமான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் போன்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அடங்கும் என்று கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக ஆயுதப்படையினரை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.25 லட்சம் கோடியை கடந்துள்ளது என்றும், நாடு 100- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

" இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் முன்முயற்சி இந்தியாவின் ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் திறக்கிறது" என்று திரு மோடி கூறினார். கப்பல் கட்டும் அமைப்பை ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டிய அவர், கப்பல் கட்டுவதில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொருளாதாரத்தில் சுமார் இரு மடங்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுவதாக குறிப்பிட்டார். தற்போது, நாட்டில் சுமார் ரூ .1.5 லட்சம் கோடி மதிப்புள்ள 60 பெரிய கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த முதலீடு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் என்றும், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஆறு மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான கப்பல் உபகரணங்கள் உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு கப்பலைக் கட்டுவதில் 2,000 தொழிலாளர்கள் ஈடுபட்டால், அது மற்ற தொழில்களில், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் சுமார் 12,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனில் தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், நூற்றுக்கணக்கான புதிய கப்பல்களின் எதிர்கால தேவையை குறிப்பிட்டார். துறைமுக மேம்பாடானதூ பொருளாதாரத்தையும் துரிதப்படுத்தும் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார். கடல்சார் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், 2014-ம் ஆண்டில் 1,25,000-க்கும் குறைவாக இருந்த கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து தற்போது சுமார் 3,00,000 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். மாலுமிகள் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளது.

தனது அரசின் மூன்றாவது பதவிக்காலம் பல முக்கிய முடிவுகளுடன் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், புதிய கொள்கைகளை விரைவாக உருவாக்குவது மற்றும் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து குறிப்பிட்டார். இந்த தொலைநோக்கின் ஒரு பகுதியாக துறைமுகத் துறையின் விரிவாக்கம் இருப்பதால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறையிலும் வளர்ச்சியை உறுதி செய்வதே இலக்கு என்று அவர் மேலும் கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள வாதவன் துறைமுகத்திற்கு ஒப்புதல் அளித்தது மூன்றாவது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட முதல் முக்கிய முடிவுகளில் ஒன்று என்று திரு மோடி குறிப்பிட்டார். ரூ. 75,000 கோடி முதலீட்டில் இந்த நவீன துறைமுகத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது, இது மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

எல்லைகள் மற்றும் கடலோரப் பகுதிகள் தொடர்பான உள்கட்டமைப்பு இணைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதும் இல்லாத பணிகளை எடுத்துரைத்த திரு மோடி, ஜம்மு காஷ்மீரில் அண்மையில் தொடங்கப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதை கார்கில், லடாக் போன்ற எல்லைப் பகுதிகளை எளிதாக அணுகுவதற்கு உதவும் என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை திறக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார், இது எல்லைக்கோட்டிற்கு ராணுவத்தின் அணுகலை மேம்படுத்துகிறது. ஷின்குன் லா சுரங்கப்பாதை, ஜோஜிலா சுரங்கப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் நடைபெற்று வரும் விரைவான பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். பாரத்மாலா திட்டம் எல்லைப் பகுதிகளில் சிறந்த தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியில் துடிப்புமிக்க கிராமத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளாக தொலைதூரத் தீவுகள் மீது அரசு கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், மக்கள் வசிக்காத தீவுகளை முறையாகக் கண்காணித்தல், பெயரிடுதல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில்  நீருக்கடியில் உள்ள கடற்பகுதிகளுக்கு இந்தியாவின் முன்முயற்சியில் ஒரு சர்வதேச அமைப்பு கடந்த ஆண்டு பெயரிட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலில் உள்ள அசோக கடல் மலை, ஹர்ஷவர்தன் கடல் மலை, ராஜ ராஜ சோழன் கடல் மலை, கல்பதரு உச்சி மற்றும் சந்திரகுப்த உச்சி ஆகியவை இதில் அடங்கும். இது இந்தியாவின் பெருமையை மேம்படுத்துகிறது.

எதிர்காலத்தில் விண்வெளி, ஆழ்கடல் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தத் துறைகளில் தனது திறன்களை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார். விஞ்ஞானிகளை கடலில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்ட சமுத்ராயன் திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார், இது ஒரு சில நாடுகளால் மட்டுமே அடையப்பட்ட சாதனையாகும். எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அரசு எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை என்று அவர் கூறினார்.

காலனி ஆதிக்கத்தின் அடையாளங்களிலிருந்து இந்தியாவை விடுவித்து, 21-ம் நூற்றாண்டில் நம்பிக்கையுடன் முன்னேற்றிச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, இந்த விஷயத்தில் இந்திய கடற்படை காட்டிய தலைமைப் பண்பை எடுத்துரைத்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் கடற்படை தனது கொடியை இணைத்துள்ளதாகவும், அதற்கேற்ப அட்மிரல் தர நிலையை குறிக்கும் தோள்பட்டைகளை மறுவடிவமைப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், சுயசார்புக்கான இயக்கம் ஆகியவை காலனிய மனநிலையிலிருந்து விடுதலையை ஊக்குவிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பயணத்தில் நமது நாடு தொடர்ந்து பெருமைக்குரிய தருணங்களை அடையும் என்றும், அதற்காக பங்களிப்பு செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொறுப்புகள் வேறுபட்டாலும், இலக்கு ஒன்றாகவே உள்ளது என்பதற்கேற்ற வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கு அமைந்துள்ளது என்பதனை சுட்டிக்காட்டினார். இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்கள் நாட்டின் வலிமையை அதிகரிக்கும் என்று கூறி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திரு அஜித் பவார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

TS/IR/RS/KV

 


(Release ID: 2093100) Visitor Counter : 25