குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பழங்குடியினப் பெண் பிரதிநிதிகளுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்

Posted On: 06 JAN 2025 7:51PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின்   பழங்குடியினப் பெண் பிரதிநிதிகள் குழுவினர், ஜனவரி 6, 2025 அன்று, குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் மக்களவை செயலகத்துடன் இணைந்து தேசிய மகளிர் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பஞ்சாயத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு ' முன்முயற்சியின் கீழ் இக்குழுவினர் தில்லி சென்றுள்ளனர்.

 

இச் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாக விளங்கி வருகின்றன, அவை அடிமட்ட அளவில் நிர்வாகத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஒரு தளத்தை வழங்குகின்றன என்று கூறினார். இந்த அமைப்புகள் பெண்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன. நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 14 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றனர், இது மொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதமாகும். இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்த, பெரும்பாலான மாநிலங்கள் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

நாடு மற்றும் குடிமக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்திய அரசு செயல்பட்டு வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின்  பிரதிநிதிகள், தகுதியுடையவர்கள் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி பலன் பெற பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படுவதையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதையும், குழந்தைகள் படிப்பை பாதியில் விடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரதட்சணை, குடும்ப வன்முறை, போதைப் பழக்கம் போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராகவும் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பெண்கள் தங்கள் பொறுப்புகளை அச்சமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். ஒரு பஞ்சாயத்து பிரதிநிதியாக, கிராம மக்களிடையே பரஸ்பர  பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார். இந்த உரிமையை உரிய முறையில் பயன்படுத்தி, கிராம மக்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை பஞ்சாயத்து அளவில் தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும். இது மக்களின் வளங்களையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் பரஸ்பர நல்லிணக்கத்தையும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090700

TS/BR/KR

 

(Release ID: 2090700)

***

 


(Release ID: 2090819) Visitor Counter : 11