சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் : 2024- ஆம் ஆண்டின் செயல்பாடுகள்

Posted On: 06 JAN 2025 12:20PM by PIB Chennai

மத்திய அரசு வர்த்தக ஒதுக்கீட்டு விதிகள், 1961-ன் படி பரந்த அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட சட்டம் மற்றும் நீதித்துறையின் எண்ணற்ற சாதனைகளின் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்நிலைக் குழுவின் அறிக்கை:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தலைமையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு, ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை நடத்துவது குறித்து  சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமைப்புகள் ஆகியோரிடம் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் 2024 மார்ச் 14-ம் தேதி சமர்ப்பித்தது.

தனது அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு, பல்வேறு பிரதிநிதிகளின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள பல்வேறு கட்ட விரிவான ஆலோசனைகளையும் இக்குழு நடத்தி இருந்தது. 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இக்குழுவிடம் சமர்ப்பித்தன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புக்கு, நாடு முழுவதிலும் மக்களிடமிருந்து 21,558 கருத்துக்கள் பெறப்பட்டன. கருத்துத் தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், 12 முக்கிய உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநிலத் தேர்தல் அதிகாரிகள், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள், துறை சார்ந்த நிபுணர்களை இந்த உயர்நிலைக் குழு நேரில் அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்தது. இதே போன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்தும் பெறப்பட்டது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனம், அசோசெம் போன்ற உயர்நிலை வர்த்தக அமைப்புகள், புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு நிலைகளில் தேர்தல்களை நடத்துவதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்  காரணமாக பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் கருத்தில் கொண்டு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் தேர்தல்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி, பொதுச் செலவினங்களின் தரம், கல்வி, பிற அம்சங்களில் மோசமான விளைவுகள் ஏற்படுவதுடன் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் என்று இந்த அமைப்புகள் எடுத்துரைத்தன.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த அறிக்கை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

காலனித்துவ ஆதிக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட  குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக இந்திய நீதிச்சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள்  சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்வரப்பட்டன. முந்தைய சட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட குற்றவியல் சட்டங்களாக அவை அமைந்துள்ளன. இந்த மூன்று புதிய சட்டங்களும் 2024  ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090480

------

TS/SV/KPG/KR


(Release ID: 2090600) Visitor Counter : 24