உள்துறை அமைச்சகம்
தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதியைத் திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தில்லியில் ரூ.68,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - திரு அமித் ஷா
Posted On:
04 JAN 2025 4:31PM by PIB Chennai
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) உருவாக்கிய புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதித் தொகுதியான சுஷ்மா பவனை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். புதுதில்லி மோதி பாக்கில் அதிநவீன கால்நடை மருத்துவமனையையும் காசொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, புதுதில்லி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பன்சூரி ஸ்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமித் ஷா தமது உரையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயரிடப்பட்ட இந்த கட்டடத்திற்கு வரும் சகோதரிகள், இந்தியாவில் பெண்கள் அதிகாரம், விழிப்புணர்வுக்கு உத்வேகம் அளிப்பார்கள் என்றார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நாடு தழுவிய இயக்கத்தை சுஷ்மா தூண்டினார் என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
சுஷ்மா பவன் கட்டியதன் மூலம் சுமார் 500 பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நகர்ப்புற மேம்பாட்டுக்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் வகையில் இந்தக் கட்டிடத் திறப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தில்லியின் வளர்ச்சிக்காக ரூ .68,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சாலை மேம்பாட்டில் ரூ.41,000 கோடியும், ரயில்வே தொடர்பான திட்டங்களில் ரூ.15,000 கோடியும், விமான நிலையம் தொடர்பாக ரூ.12,000 கோடியும் மோடி அரசு முதலீடு செய்யப்பட்டுள்ளது என திரு அமித் ஷா தெரிவித்தார்.
***
PLM/KV
(Release ID: 2090226)
Visitor Counter : 23