பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்


அசோக் விஹார் ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

தில்லி நகரின் வளர்ச்சியை விரைவுபடுத்த வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, கல்வி ஆகியவற்றில் உருமாற்றம் ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தில்லிக்கு இன்று ஒரு முக்கிய நாள் : பிரதமர்

குடிசைப்பகுதிகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகளை கட்டுவதற்கான இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது: பிரதமர்

புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிற கொள்கையாகும்: பிரதமர்

Posted On: 03 JAN 2025 3:40PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். "இன்று, இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் உலகளாவிய அடையாளமாக நிற்கிறது" என்று பிரதமர் கூறினார். இந்த ஆண்டில் நாட்டின் நற்பெயர் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 2025-ம் ஆண்டிற்கான தொலைநோக்குத் திட்டத்தை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறுவதற்கும், இளைஞர்களுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும்தொழில்முனைவோருக்கான அதிகாரத்தையும் அளிப்பதற்கும், புதிய வேளாண் சாதனைகளைப் படைப்பதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்க்கையை எளிதாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, மக்களை வாழ்த்திய பிரதமர், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான திட்டங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு வகையில் புதிய இன்னிங்ஸைத்  தொடங்கியுள்ள அந்த மக்களையும், குறிப்பாக பெண்களையும் அவர் வாழ்த்தினார். குடிசை வீடுகளுக்குப் பதிலாக உறுதியான வீடுகள், வாடகை வீடுகளுக்கு பதிலாக சொந்த வீடுகள் உண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அர்த்தப்படுத்துகின்றன என்று அவர் மேலும் கூறினார். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் சுயமரியாதை, புதிய விருப்பங்கள் மற்றும் கனவுகள் நிறைந்த இல்லத்தின் அடையாளமாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அவர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க தாம் வந்திருப்பதாக அவர் கூறினார். கடந்த காலத்தில் நெருக்கடி நிலையின் இருண்ட நாட்களை நினைவுகூர்ந்த திரு மோடி, தாமும் தம்மைப் போன்ற பல கட்சித் தொண்டர்களும் அவசர நிலைக்கு எதிரான தலைமறைவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அசோக் விஹாரில் தங்கியிருந்ததாகக் கூறினார்.

"இன்று ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது" என்று திரு மோடி கூறினார். வளர்ந்த இந்தியாவில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உறுதியான வீடு இருப்பதை உறுதி செய்வதற்கான தீர்மானத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தில்லிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே, குடிசைகளுக்கு பதிலாக உறுதியான வீடுகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குடிசைவாசிகளுக்காக கல்காஜி விரிவாக்கப் பகுதியில் 3,000-க்கும்  மேற்பட்ட வீடுகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். எந்த நம்பிக்கையும் இல்லாமல் பல தலைமுறைகளாக குடிசைகளில் வாழ்ந்த குடும்பங்கள் முதல் முறையாக உறுதியான வீடுகளுக்கு குடிபெயர்ந்தன என்று அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் தான் என்று தாம் அப்போது கூறியிருந்ததை அவர் இப்போது நினைவு கூர்ந்தார். இன்று சுமார் 1,500 வீடுகளின் சாவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார். "ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களின் சுயமரியாதையை மேலும் உயர்த்தும்," என்று அவர் கூறினார். இன்றைய தினம் பயனாளிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அவர்களிடையே புதிய உற்சாகமும், சக்தியும் இருந்ததை தாம் உணர்ந்ததாக பிரதமர் கூறினார். வீட்டின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில், 4 கோடிக்கும் அதிகமானோரின் சொந்த வீடு வேண்டும் என்ற கனவை தமது அரசு நிறைவேற்றியுள்ளது என்றார். தற்போது கூரை இல்லாமல் வசிக்கும் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுமாறு அவர் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏழை மக்களின் சுயமரியாதையை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், இதுவே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான சக்தி என்றும் திரு மோடி கூறினார். தில்லியில் சுமார் 3000 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். வரும் ஆண்டில் நகரவாசிகளுக்கு ஆயிரக்கணக்கான  புதிய வீடுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தப் பகுதிகளில் ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர், அவர்கள் வசித்து வந்த வீடுகள் மிகவும் பழமையானவை. புதிய, நவீன வீடுகளின் கட்டுமானம் அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை வழங்கும், இது அவர்களின் நல்வாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். நகரில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலின் வெளிச்சத்தில், நரேலா துணை நகரத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் தில்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மத்திய அரசு மேலும் துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் அறிவித்தார்.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் நகரங்களின் முக்கிய பங்கை வலியுறுத்திய பிரதமர், இந்த நகர்ப்புற மையங்களுக்குத்தான் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வந்து சேர்கின்றனர் என்று குறிப்பிட்டார். அனைத்து குடிமக்களுக்கும் தரமான வீட்டுவசதி மற்றும் கல்வியை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். "நமது நகரங்கள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளம். மக்கள் பெரிய கனவுகளுடன் இங்கு வருகிறார்கள், அந்தக் கனவுகளை நனவாக்க அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். நமது நகரங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரமான வாழ்க்கையை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் கூறினார். வீட்டுவசதித் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை சுட்டிக் காட்டிய பிரதமர், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டார். இதன் கீழ், கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் தில்லியில் 30,000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது இந்த முயற்சியை விரிவுபடுத்தி வருகிறோம், அடுத்த கட்டத்தில், நாடு முழுவதும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு மேலும் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று அவர் மேலும் கூறினார். ஆண்டுக்கு ரூ.9 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் பெரிய அளவில் மானியங்கள் உட்பட நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி குறித்தும் பிரதமர் விளக்கினார். "ஒவ்வொரு குடும்பமும், அது ஏழையாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, ஒரு நல்ல வீட்டை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, அனைத்துக் குழந்தைகளுக்கும், குறிப்பாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். "ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவார்கள் என்று கனவு காண்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் உயர்நிலையிலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை வழங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். விளிம்புநிலை சமூகங்கள் உட்பட அனைத்து பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் வெற்றிபெற வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தாய்மொழிகளில் கற்பிப்பதை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையையும் பிரதமர் பாராட்டினார். "புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்போது மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களாக மாறுவதற்கான தெளிவான பாதையைக் கொண்டுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கல்வி முறையை மேம்படுத்துவதில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முக்கிய பங்கையும் திரு மோடி குறிப்பிட்டார். நவீன கல்வி நடைமுறைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக புதிய சிபிஎஸ்இ கட்டிடம் கட்டப்படுவதாக இருந்து எனக்கு அவர் அறிவித்தார். "புதிய சிபிஎஸ்இ கட்டிடம் நவீன கல்வியை விரிவுபடுத்துவதற்கும், மேம்பட்ட தேர்வு முறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் உதவும்" என்று அவர் கூறினார்.

உயர்கல்வித் துறையில்,  தில்லி பல்கலைக்கழகத்தின் நற்பெயர் தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். "தில்லி இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதே எங்கள் முயற்சி. இன்று, புதிய வளாகங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, இது ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்கும்.  நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு வளாகங்கள் இப்போது முறையே சூரஜ்மல் விஹார் மற்றும் துவாரகாவில் உருவாக்கப்படும்" என்று   திரு மோடி மேலும் கூறினார்.  மேலும், நஜஃப்கரில் வீர சாவர்க்கர் பெயரில் ஒரு புதிய கல்லூரியும் கட்டப்படும் என்று அவர் அறிவித்தார்.

ஒருபுறம், தில்லியில் கல்வி அமைப்புக்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது, மறுபுறம், மாநில அரசின் அப்பட்டமான பொய்கள் உள்ளன என்று பிரதமர்   குறிப்பிட்டார். குறிப்பாக, கல்விக்கான நிதியை தவறாக நிர்வகிப்பதன் மூலம் தில்லி மாநில அரசு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "சமக்ர சிக்ஷா அபியான்" திட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட நிதியை குழந்தைகளின் கல்விக்கு கூட மாநில அரசு செலவிடவில்லை என்ற நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மதுபான ஒப்பந்தங்கள், பள்ளிக் கல்வி, ஏழைகளுக்கான சுகாதாரம், மாசுக் கட்டுப்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன.  சில தீவிர ஊழல் நபர்கள், அண்ணா ஹசாரேவை  முன்னிலையாக வைத்து பயன்படுத்தி, தில்லியை இந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்" என்று திரு மோடி மேலும் கூறினார்.  தில்லி எப்போதும் நல்லாட்சியை கனவு காண்கிறது, ஆனால் ஆளும் மாநில அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பிரதமர் மேலும் கூறினார். இதன் விளைவாக, தில்லி மக்கள் இந்த நெருக்கடிக்கு எதிராக போராடுவதில் உறுதியாக உள்ளனர், மாற்றத்தைக் கொண்டுவரவும், நகரத்தை இந்த ஊழலில் இருந்து அகற்றவும் சபதம் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் சாலைகள், மெட்ரோ அமைப்புகள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் போன்ற பெரிய திட்டங்களை மத்திய அரசு கையாண்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மாநில அரசு தனது பொறுப்புகளை, குறிப்பாக யமுனை நதியை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் நிறைவேற்றத் தவறிவிட்டது. யமுனை நதியை  புறக்கணித்ததால் மக்கள் அசுத்த நீரால் தவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

தேசிய அளவில் நல்ல திட்டங்களின் பயன்கள் தில்லியை சென்றடைவதை உறுதி செய்வதே தமது குறிக்கோள் என்று திரு மோடி குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிதி பலன்களையும், சேமிப்பையும் வழங்கியுள்ளன. அரசு மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாக்குவதாகவும், குடும்பங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் சூரியசக்தி வீட்டு மின்சார திட்டத்தின் மூலம், குடும்பங்கள் மின்சார உற்பத்தியாளர்களாக மாறி வருவதாகவும், சூரியசக்தி தகடுகளைப் பொருத்த மத்திய அரசு ரூ.78,000  வழங்க முன்வந்துள்ளதாகவும் திரு மோடி கூறினார்.

தில்லியில் உள்ள சுமார் 75 லட்சம் ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருவதாக திரு  மோடி  சுட்டிக் காட்டினார் . "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டம் தில்லி மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

80 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காக தில்லியில் சுமார் 500 மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாயை மக்கள் சேமிக்க முடிகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இலவச சிகிச்சையை வழங்கும் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களை தில்லி மக்களுக்கு வழங்க விரும்புவதாக திரு மோடி தெரிவித்தார். ஆனால் ஆயுஷ்மான் திட்டத்தை தில்லியில் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கவில்லை. இதனால், தில்லி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தில்லி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், "70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது என்றார். இருப்பினும், தில்லி மக்கள், குறிப்பாக வயதானவர்கள், மாநில அரசின் சுயநலம், ஆணவம் மற்றும் பிடிவாதம் காரணமாக இதனால் பயனடையவில்லை. தில்லி குடியிருப்பாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முழு உணர்திறனுடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தில்லியில் காலனிகளை முறைப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் திரு மோடி எடுத்துரைத்தார். மேலும் இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளித்தது என்றும் அவர் கூறினார். குடிநீர்,கழிவுநீர் அகற்றல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்க மாநில அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தில்லி மக்களுக்கு திரு மோடி உறுதியளித்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குதல், புதிய நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் போன்ற தில்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தத் திட்டங்களில் மாநிலத்திற்கு எந்த தலையீடும் இல்லாததால், பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. தில்லி குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த முன்னேற்றங்கள் முக்கியமானவை. சிவமூர்த்தி முதல் நெல்சன் மண்டேலா மார்க் வரை சுரங்கப்பாதை அமைத்தல் மற்றும் பல முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளை இணைத்தல் உள்ளிட்ட அண்மையில் முன்மொழியப்பட்ட போக்குவரத்து தீர்வுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை இது கணிசமாகக் குறைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

2025-ம் ஆண்டிற்கான தமது தொலைநோக்குப் பார்வையை விளக்கிய பிரதமர், "2025 ஆம் ஆண்டு தில்லியில் நல்லாட்சியின் புதிய சகாப்தத்தைக் கொண்டு வரும். இது 'தேசம் முதலில், நாட்டு மக்கள் முதலில்' என்ற உணர்வை வலுப்படுத்துவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொது நலனில் கவனம் செலுத்தும் ஒரு புதிய அரசியலைத் தொடங்குவதைக் குறிக்கும்" என்று கூறி திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார். தங்கள் வீடுகளின் சாவிகளைப் பெற்றவர்களையும், புதிய கல்வி நிறுவனங்களுக்காக தில்லி மக்களையும் அவர் பாராட்டினார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

அனைவருக்கும் வீடு என்ற தனது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில், குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், ஜக்கி ஜோப்ரி தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

ஜே.ஜே தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த பிரதமர், தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார். புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் திறப்பு தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி.டி.ஏ) இரண்டாவது வெற்றிகரமான குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தை நிறைவு செய்வதைக் குறிக்கும். தில்லியில் உள்ள ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கு சரியான வசதிகளுடன் கூடிய சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

அரசால் ஒரு வீடு (ப்ளாட்) கட்ட செலவிடப்படும் ஒவ்வொரு ரூ.25 லட்சத்திற்கும், தகுதியான பயனாளிகள் மொத்த தொகையில் 7% க்கும் குறைவாகவே செலுத்துகிறார்கள். இதில் பெயரளவு பங்களிப்பாக ரூ.1.42 லட்சம் மற்றும் ஐந்து வருட பராமரிப்புக்கு ரூ .30,000 அடங்கும்.

நவ்ரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு குடியிருப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையம் 600-க்கும் மேற்பட்ட பாழடைந்த குடியிருப்புகளை அதிநவீன வணிக கோபுரங்களுடன் மாற்றுவதன் மூலம் இப்பகுதியை மாற்றியுள்ளது. இது மேம்பட்ட வசதிகளுடன் சுமார் 34 லட்சம் சதுர அடி பிரீமியம் வணிக இடத்தை வழங்குகிறது. பூஜ்ஜிய வெளியேற்றம், சூரியசக்தி உற்பத்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புளோடு அது தொடர்பான விதிகளுடன், இந்தத் திட்டம் பசுமை கட்டிட நடைமுறைகளை உள்ளடக்கியது.

சரோஜினி நகரில் உள்ள .பி.ஆர்.ஏ. வகை-II குடியிருப்புகள் 28 கோபுரங்களை உள்ளடக்கியது. இது 2,500 குடியிருப்பு அலகுகளைக் கொண்டுள்ளது, இது நவீன வசதிகள் மற்றும் இடத்தை திறமையாகப் பயன்படுத்துகிறது. திட்டத்தின் வடிவமைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கையை ஊக்குவிக்கும் சூரிய சக்தியில் இயங்கும் கழிவுத் தொகுப்புகளை உள்ளடக்கியதாகும்.

தில்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இயின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். இதில் அலுவலகங்கள், அரங்கம், மேம்பட்ட தரவு மையம், விரிவான நீர் மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தக் கட்டிடம் உயர் சுற்றுச்சூழல் தரத்திற்கு இணையாகக் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பிளாட்டினம் மதிப்பீட்டு தரங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் கிழக்கு தில்லியில் உள்ள சூரஜ்மல் விஹாரில் உள்ள கிழக்கு வளாகம் மற்றும் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகம் ஆகியவை அடங்கும். நஜாஃப்கரின் ரோஷன்புராவில் கல்விக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட வீர சாவர்க்கர் கல்லூரி கட்டுவதும் இதில் அடங்கும்.

***

TS/PKV/RJ/DL


(Release ID: 2089928) Visitor Counter : 32