பிரதமர் அலுவலகம்
ஜனவரி 3-ந் தேதி தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
அசோக் விஹார் ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திறந்து வைக்கிறார்
நௌரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் ஜிபிஆர்ஏ வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
துவாரகாவில் சிபிஎஸ்இயின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
நஜாஃப்கரில் உள்ள ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
02 JAN 2025 10:18AM by PIB Chennai
'அனைவருக்கும் வீடு' என்ற தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜனவரி 3 ஆம் தேதி மதியம் 12:10 மணியளவில் தில்லி, அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு, மதியம் 12:45 மணியளவில், அவர் தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
ஜே.ஜே. தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கும் பிரதமர், தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார். புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் திறப்பு விழா, தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி.டி.ஏ) இரண்டாவது வெற்றிகரமான குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தை நிறைவு செய்வதைக் குறிக்கும். தில்லியில் உள்ள ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கு சரியான வசதிகளுடன் கூடிய சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
அரசால் ஒரு குடியிருப்பு கட்ட செலவிடப்படும் ஒவ்வொரு ரூ.25 லட்சத்திற்கும், தகுதியான பயனாளிகள் மொத்த தொகையில் 7% க்கும் குறைவாகவே செலுத்துகிறார்கள், இதில் பெயரளவு பங்களிப்பாக ரூ.1.42 லட்சம் மற்றும் ஐந்து வருட பராமரிப்புக்கு ரூ. 30,000 ஆகியவையும் அடங்கும்.
நௌரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையம் 600 க்கும் மேற்பட்ட பாழடைந்த குடியிருப்புகளை அதிநவீன வணிக அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை புதுப்பித்துள்ளது. இது மேம்பட்ட வசதிகளுடன் சுமார் 34 லட்சம் சதுர அடி பிரீமியம் வணிக இடத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் பூஜ்ஜிய கழிவு வெளியேற்றம், சூரிய சக்தி உற்பத்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய பசுமைக் கட்டிட நடைமுறைகளை கடைபிடித்து கட்டப்பட்டதாகும்.
சரோஜினி நகரில் உள்ள ஜிபிஆர்ஏ வகை-II குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது, இது 2,500 குடியிருப்பு வீடுகளைக் கொண்டுள்ளது, இது நவீன வசதிகளுடன் கிடைக்கும் இடத்தை திறமையாகப் பயன்படுத்தியுள்ளதுது. திட்டத்தின் வடிவமைப்பானது மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கையை ஊக்குவிக்கும் சூரிய சக்தியில் இயங்கும் கழிவு தொகுப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தில்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இதில் அலுவலகங்கள், ஆடிட்டோரியம், மேம்பட்ட தரவு மையம், விரிவான நீர் மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இக்கட்டடம் உயர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பவள மதிப்பீட்டு தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் கிழக்கு தில்லியில் உள்ள சூரஜ்மல் விஹாரின் கிழக்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் அடங்கும். நஜாஃப்கரின் ரோஷன்புராவில் கல்விக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட வீர சாவர்க்கர் கல்லூரி கட்டுவதும் இத்திட்டங்களில் அடங்கும்.
***
TS/PKV/KV/KR
(Release ID: 2089531)
Visitor Counter : 71
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada