மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஒரே நாடு ஒரே சந்தா
Posted On:
01 JAN 2025 11:51AM by PIB Chennai
பண்டைய அறிவு மற்றும் வளமான பாரம்பரியம் கொண்ட நாடான இந்தியா, எப்போதும் புதுமை மற்றும் கண்டுபிடிப்பின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. கணிதம் மற்றும் வானியலில் முன்னோடியாக இருப்பது முதல் அறிவியலின் பல்வேறு துறைகளில் அற்புதமான பங்களிப்புகள் வரை, நாட்டின் அறிவுசார் சாதனைகளின் மரபு வரலாறு என்பது ஒப்பிடமுடியாதது. ஆகஸ்ட் 15, 2022 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையின் கொத்தளங்களில் இருந்து, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வகிக்கும் முக்கிய பங்கையும் தேசத்திற்கு நினைவூட்டினார். அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை, குறிப்பாக அமிர்த காலத்தில், வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், "ஜெய் அனுசந்தன்" என்ற எழுச்சியூட்டும் முழக்கத்துடன் புதுமைப் படைப்புகளில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
துடிப்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்புக்கான இந்த அழைப்பு, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளுடன் எதிரொலித்தது, இது கல்விச் சிறப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் அடிப்படை உந்து சக்தியாக ஆராய்ச்சியை அடையாளம் காட்டுகிறது. கல்வித் தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்க இந்தக் கொள்கை முயல்கிறது.
இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 25 நவம்பர் 2024 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சர்வதேச அறிவார்ந்த பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் அறிவுப் பகிர்தலில் உள்ள தடைகளை நீக்க இந்தத் திட்டம் முயற்சி செய்கிறது. இந்தியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகங்கள் சிறந்த உலகளாவிய வளங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதும், புதுமைகளை வளர்ப்பதும், துறைகளில் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துவதும் இதன் குறிக்கோள்.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டம் 2047 க்குள் ஒரு தன்னம்பிக்கை மற்றும் வளர்ந்த தேசமாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தின் ஒரு மைல்கல்லாகும். இந்த முயற்சி வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையின் முக்கிய தளமாகவும் அங்கமாகும்.
தகுதியான அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு உயர்மட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளுக்கான அணுகலை வழங்குவதே திட்டத்தின் நோக்கம். இது நாடு முழுவதும் 6,300 க்கும் அதிகமான அரசால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை உள்ளடக்கியது.
• 30 முக்கிய சர்வதேச வெளியீட்டாளர்களிடமிருந்து 13,000 க்கும் மேற்பட்ட அறிவார்ந்த பத்திரிகைகளுக்கான அணுகல்.
• ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), மருத்துவம், சமூக அறிவியல், நிதி & கணக்கு போன்ற துறைகளில் சுமார் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கிறது.
• 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும், அறிவுக்கு சமமான அணுகலை உறுதி செய்தல்.
நிதி மற்றும் நிதி உத்தி:
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 6,000 கோடி ரூபாயானது 2025 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை இத்திட்டம் சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது
தற்போதுள்ள 10 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கூட்டமைப்பு முயற்சிகள் மற்றும் பல அரசு உயர் கல்வி நிறுவனங்களின் முன்முயற்சிகளை மேம்படுத்துவதன் மூலம், ஒரே நாடு ஒரே சந்தா மூலம் ஒன்றிணைக்கும் அணுகுமுறை அறிவு பரவலை ஜனநாயகப்படுத்தும் மற்றும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும், அவர்கள் சிறந்து விளங்க தேவையான வளங்களை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089179
***
(Release ID: 2089179)
TS/SMB/RR/KR
(Release ID: 2089245)
Visitor Counter : 77