பிரதமர் அலுவலகம்
தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
Posted On:
26 DEC 2024 9:54PM by PIB Chennai
3-வது வீரபாலகர் தினத்தை முன்னிட்டு புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியையொட்டி தேசிய சிறுவர் விருது பெற்ற 17 பேருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த மனம் திறந்த கலந்துரையாடலின் போது, குழந்தைகளின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டறிந்த பிரதமர், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமாக உழைக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். பல புத்தகங்களை எழுதியுள்ள ஒரு சிறுமியுடன் பிரதமர் உரையாடிய போது, தனது புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தெரிவித்த அச்சிறுமி மற்ற சிறுவர்களும் தங்கள் சொந்த புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளனர் என்றார். மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளித்ததற்காக திரு மோடி அச்சிறுமியைப் பாராட்டினார்.
பின்னர் பல மொழிகளில் பாடுவதில் தேர்ச்சி பெற்ற மற்றொரு விருதாளருடன் பிரதமர் கலந்துரையாடினார். பல மொழிகளில் பயிற்சி பெற்றது பற்றி சிறுவனிடம் மோடி விசாரித்தபோது, தனக்கு முறையான பயிற்சி இல்லை என்றும், தன்னால் இந்தி, ஆங்கிலம், உருது, காஷ்மீரி ஆகிய நான்கு மொழிகளில் பாட முடியும் என்றும் அவன் பதிலளித்தான். தனக்கு சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்று இருப்பதாகவும், மேடைநிகழ்ச்சிகளில் பாடுவதாகவும் சிறுவன் மேலும் கூறினான். சிறுவனின் திறமையைப் பிரதமர் மோடி பாராட்டினார்.
இளம் சதுரங்க வீரர் ஒருவருடன் உரையாடிய திரு மோடி, உங்களுக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தது யார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த சிறுவன், தனது தந்தையிடம் இருந்தும், யூடியூப் வீடியோக்களை பார்த்தும் கற்றுக்கொண்டதாக கூறினான்.
கார்கில் வெற்றி தினத்தின் 25-வது ஆண்டு தினத்தை கொண்டாடுவதற்காக லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்திலிருந்து புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் வரை 13 நாட்களில் 1251 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்த மற்றொரு சிறுவனின் சாதனையைப் பிரதமர் கேட்டறிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 வது பிறந்த நாளையும், சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவையும் கொண்டாடுவதற்காக மணிப்பூரின் மொய்ராங்கில் உள்ள ஐ.என்.ஏ நினைவகத்திலிருந்து புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வரை 32 நாட்களில் 2612 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்றதாகவும் அச் சிறுவன் கூறினான். ஒரு நாளில் அதிகபட்சமாக 129.5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியுள்ளதாக சிறுவன் பிரதமரிடம் தெரிவித்தான்.
ஒரு நிமிடத்தில் 80 செம்மொழி நடன வடிவத்தை முடித்து, ஒரு நிமிடத்தில் 13 சமஸ்கிருத ஸ்லோகங்களை ஒப்புவித்து இரண்டு சர்வதேச சாதனைகளைச் செய்திருப்பதாகவும், இவை இரண்டையும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாகவும் கூறிய ஒரு சிறுமியுடன் திரு மோடி உரையாடினார்.
ஜூடோ விளையாட்டில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவருடன் கலந்துரையாடிய பிரதமர், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல விரும்பும் அந்தப் பெண் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானே நிலைப்படுத்தும் கரண்டியை தயாரித்த, ஒருவரின் அறிவு நிலை வயதை முன்கணிப்பு செய்யும் மாதிரியை உருவாக்கிய ஒரு சிறுமியுடன் திரு மோடி கலந்துரையாடினார். தான் இதற்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதாகவும், இந்த தலைப்பில் மேலும் ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகவும் அந்த சிறுமி பிரதமரிடம் தெரிவித்தார்.
கர்நாடக இசை மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களின் கலவையுடன் ஹரிகதை பாராயணத்தின் 100 நிகழ்ச்சிகளை நிகழ்த்திய ஒரு பெண் கலைஞரின் உரையைக் கேட்ட பிரதமர், அவரைப் பாராட்டினார்.
கடந்த 2 ஆண்டுகளில் 5 வெவ்வேறு நாடுகளில் 5 உயரமான சிகரங்களை ஏறிய இளம் மலையேறும் வீரர் ஒருவரிடம் பேசிய பிரதமர், மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்தியராக அவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து வினவினார். மக்களிடமிருந்து நிறைய அன்பையும் அரவணைப்பையும் பெற்றதாக சிறுமி பதிலளித்தார். மேலும், மலையேறுதலின் பின்னணியில் உள்ள தனது நோக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உடல் தகுதியை ஊக்குவிப்பதே என்று பிரதமரிடம் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் மற்றும் 6 தேசிய பதக்கங்களை வென்ற ரோலர் ஸ்கேட்டிங் பெண் குழந்தையின் சாதனைகளை திரு மோடி கேட்டறிந்தார். இந்த மாதம் தாய்லாந்தில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாரா தடகள வீராங்கனையான சிறுமியின் சாதனை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பளுதூக்கும் சாம்பியன் பட்டப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்த மற்றொரு பெண் தடகள வீராங்கனையின் அனுபவத்தையும் அவர் கேட்டறிந்தார்.
தீ விபத்துக்குள்ளான அடுக்குமாடிக் கட்டிடத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி துணிச்சலைக் காட்டிய மற்றொரு விருதாளரை பிரதமர் பாராட்டினார். நீச்சலின் போது மற்றவர்கள் நீரில் மூழ்காமல் காப்பாற்றிய ஒரு சிறுவனையும் அவர் பாராட்டினார்.
அனைத்து இளைஞர்களையும் வாழ்த்திய திரு மோடி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
***
TS/SMB/KV
(Release ID: 2088327)
Visitor Counter : 11