ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நில மூலவளத் துறையின் (ஊரக வளர்ச்சி அமைச்சகம்) :2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
26 DEC 2024 3:59PM by PIB Chennai
நில வளத் துறை இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1) டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்
2) பிரதமரின் விவசாயப் பாசனத் திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்
டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்
நாடு முழுவதும் 150 நகரங்களில் முன்னோட்டமாக நிலப் பதிவுகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல்திட்டத்தின் கீழ் "தேசிய புவிவெளி அறிவு அடிப்படையிலான நகர்ப்புற நில ஆய்வு (நக்ஷ)" என்ற புதிய திட்டத்தை 2024, செப்டம்பரில் இத்துறை தொடங்கியது. இந்த முன்னோடித் திட்டம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வருவாய் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் தீவிர ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதனை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.193.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் 100% நிதி உதவியுடன் டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிலப் பதிவுகள் செய்வதற்கான டிஜிட்டல் மயமாக்கல் / கணினிமயமாக்கல் திட்டத்தை இத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நில ஆவணங்கள் மற்றும் பதிவு பற்றிய தகவல்களை ஆன்லைனில் கிடைக்கச் செய்வதும், அதன் மூலம் மோசடி / பினாமி பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதும் நில தகராறுகளை குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இது அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2008-09 முதல் 2024-25 வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.2428 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில், கிராமப்புற (சில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் தவிர) கிடைக்கக்கூடிய நிலப் பதிவுகளில் 98.5% உரிமைப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் விவசாயப் பாசனத் திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் கூறு
நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மண் அரிப்பு, நீர் பற்றாக்குறை, பருவநிலையில் நிச்சயமற்ற தன்மை போன்ற முக்கியமான சவால்களுக்கு சிறந்த தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிரதமரின் விவசாயப் பாசனத் திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் கூறானது விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வறட்சிகளின் மோசமான தாக்கங்களைத் தணிவிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது.
இந்த முயற்சி 49.5 லட்சம் ஹெக்டேரில் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது, இதில் மத்திய பங்காக ரூ .8,134 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை, 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்) 1,150 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, 20 டிசம்பர் 2024 நிலவரப்படி மத்திய பங்கில் ரூ. 4,574.54 கோடி (56%) வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி (2018), இந்தியாவில் சுமார் 5 மில்லியன் நீரூற்றுகள் உள்ளன, அவற்றில் சுமார் 3 மில்லியன் நீரூற்றுகள் இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ளன. இந்த நீரூற்றுகளில் பாதி வறண்டு அல்லது உலர்ந்த நிலையில் உள்ளன. குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தபோதும், நீர் வழிந்தோடல் காரணமாக மலைப்பாங்கான பகுதிகள் கோடை காலங்களில் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. 2019 ஆம் ஆண்டில், நீர்ப்பாசன மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் இணைந்த நாடு தழுவிய திட்டத்தின் மூலம் இந்த பிரச்சினையை நில வளத் துறை தீர்க்க நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இதையடுத்து 2,740 நீரூற்றுகள் புத்துயிர் பெற ஒரு முன்னோட்ட முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிக எண்ணிக்கையில் நீரூற்றுகளை புத்துயிரூட்ட இத்துறை ஆலோசித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088125
***
TS/SMB/AG/DL
(Release ID: 2088210)
Visitor Counter : 33