பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்


ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

1153 அடல் கிராம சுஷாசன் கட்டடங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நினைவு தபால் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்

இன்று நம் அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நாள் - இன்று மதிப்பிற்குரிய அடல் ஜி பிறந்த நாள்: பிரதமர்

கென்-பெட்வா இணைப்புத் திட்டம் பந்தேல்கண்ட் பகுதியில் வளம், மகிழ்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும்: பிரதமர்

கடந்த பத்து ஆண்டுகள் இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நீர் பாதுகாப்பு, நீர் சேமிப்பின் காலமாக நினைவுகூரப்படும்: பிரதமர்

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது: பிரதமர்

Posted On: 25 DEC 2024 3:27PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று குறிப்பிடத்தக்க உத்வேகம் அளிக்கும் நாள் என்று கூறிய பிரதமர், இன்று நல் ஆளுகை, நல்ல சேவைக்கான திருவிழாவைக் குறிக்கிறது என்றார். இது நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார். வாஜ்பாயை நினைவு தபால் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளாக வாஜ்பாய் தம்மைப் போன்ற பல வீரர்களை வளர்த்து வழிகாட்டியதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக அடல் ஆற்றிய சேவை என்றும் நம் நினைவில் அழியாது நிலைத்திருக்கும் என்று பிரதமர் கூறினார். 1100-க்கும் மேற்பட்ட அடல் கிராம சுஷாசன் சதன் பணிகள் இன்று முதல் நடைபெற்று வருவதாகவும், அதற்கான முதல் தவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். அடல் கிராம சேவா சதன், கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி தினம் என்பது ஒரு நாள் விவகாரம் அல்ல என்பதை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, "நல்லாட்சி என்பது நமது அரசுகளின் அடையாளம்" என்றார். மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காகவும், மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காகவும் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இதன் பின்னணியில் நல்ல ஆளுகை வலுவான காரணியாக உள்ளது என்று கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், வளர்ச்சி, மக்கள் நலன், நல்லாட்சி ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் நாட்டை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பிற குறிப்பிடத்தக்க கல்வியாளர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மக்கள் நலனையும் வளர்ச்சிப் பணிகளையும் உறுதி செய்வதில் தங்கள் அரசு வெற்றி கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "சில அளவுகோல்களின் அடிப்படையில் நாம் மதிப்பீடு செய்யப்பட்டால், சாமானிய மக்களுக்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதை நாடு காணும்" என்று திரு நரேந்திர மோடி கூறினார் . நமது நாட்டிற்காக ரத்தம் சிந்திய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க அரசு அயராது உழைத்தது என்றும் அவர் கூறினார். நல்ல நிர்வாகத்திற்கு நல்ல திட்டங்கள் மட்டுமின்றி, அவற்றை திறம்பட செயல்படுத்துவதும் தேவை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், அரசுத் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனளிக்கின்றன என்பதுதான் நல்ல ஆளுகையின் அளவுகோல் என்று குறிப்பிட்டார். அறிவிப்புகளை வெளியிட்ட முந்தைய அரசுகள், அவற்றை அமல்படுத்துவதில் ஆர்வம், நோக்கமின்மை காரணமாக அதன் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் ரூ. 12,000 மதிப்பிலான பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி போன்ற திட்டங்களின் நன்மைகளை எடுத்துரைத்த அவர், ஜன் தன் வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் இது சாத்தியமானது என்றார். வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அவற்றை மொபைல் எண்களுடன் இணைக்காமல் இது சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை சுட்டிக்காட்டினார். முன்பு, ஏழைகள் ரேஷன் பொருட்களை பெற போராட வேண்டியிருந்தது எனவும், அதே நேரத்தில் இன்று, ஏழைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இலவச ரேஷன் பெறுகிறார்கள் என்றும் அவர் கூறினார். மோசடியை ஒழிக்கும் தொழில்நுட்பம், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை போன்ற நாடு தழுவிய வசதிகளை அறிமுகப்படுத்தியதை அவர் எடுத்துரைத்தார்.

நல்ல நிர்வாகம் என்றால், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் கெஞ்சவோ அல்லது அரசு அலுவலகங்களைச் சுற்றி அலையவோ கூடாது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 100% பயனாளிகளை 100% நன்மைகளுடன் இணைப்பதே இந்த அரசின் கொள்கை என்று அவர் எடுத்துரைத்தார். இது தங்களது அரசை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது என அவர் கூறினார். ஒட்டுமொத்த நாடும் இதைக் காண்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அதனால்தான் சேவை செய்ய அவர்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய, எதிர்கால சவால்களை சிறந்த நிர்வாகம் எதிர்கொள்கிறது என்று வலியுறுத்திய பிரதமர், முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகத்தால் துரதிர்ஷ்டவசமாக பந்தேல்கண்ட் மக்கள் பல ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். திறமையான நிர்வாகம் இல்லாததால் பந்தேல்கண்டில் பல தலைமுறை விவசாயிகளும் பெண்களும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் போராடி வந்ததாக கூறிய அவர், முந்தைய அரசுகள் தண்ணீர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் நதி நீரின் முக்கியத்துவத்தை முதன்முதலில் புரிந்துகொண்டவர்களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் ஒருவர் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள பெரிய நதிப் பள்ளத்தாக்கு திட்டங்கள் டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவரது முயற்சிகளால் மத்திய நீர் ஆணையம் நிறுவப்பட்டது என்றும் குறிப்பிட்டார். நீர் சேமிப்பு, பெரிய அணைக்கட்டுத் திட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புக்காக முந்தைய அரசுகள் அவருக்கு உரிய பெருமையை ஒருபோதும் வழங்கவில்லை என்று பிரதமர் வேதனை தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் நதிநீர் தாவாக்கள் உள்ளன என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகம், நோக்கமின்மை ஆகியவை எந்தவொரு உறுதியான முயற்சிகளையும் தடுத்து நிறுத்தின என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வாஜ்பாய் அரசு தண்ணீர் தொடர்பான சவால்களை தீவிரமாக எதிர்கொள்ளத் தொடங்கியது என்றும் ஆனால் 2004க்குப் பிறகு அந்த அரசு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் இயக்கத்தைத் தமது அரசு தற்போது துரிதப்படுத்தி வருவதாகக் கூறினார். கென்-பெட்வா இணைப்பு திட்டம் நனவாகவுள்ளது என்றும், புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் வளம், மகிழ்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். சத்தர்பூர், டிக்கம்கர், நிவாரி, பன்னா, தாமோ, சாகர் உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கும் கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் பலன்களை விளக்கிய திரு நரேந்திர மோடி , இந்தத் திட்டம் பந்தா, மஹோபா, லலித்பூர், ஜான்சி மாவட்டங்கள் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள பந்தேல்கண்ட் பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

நதிகள் இணைப்பு என்ற மாபெரும் இயக்கத்தின் கீழ் இரண்டு திட்டங்களைத் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அண்மையில் ராஜஸ்தானுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, பர்பதி – காளிசிந்த்-சம்பல், கென்-பெட்வா இணைப்புத் திட்டங்கள் மூலம் பல்வேறு நதிகளை இணைப்பது உறுதி செய்யப்பட்டது என்றார். இந்த ஒப்பந்தம் மத்தியப் பிரதேசத்திற்கும் கணிசமான அளவு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

"21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு" என்று திரு நரேந்திர மோடி கூறினார். போதுமான நீர் உள்ள நாடுகள், பிராந்தியங்கள் மட்டுமே முன்னேறும் என்றும், வளமான வயல்களுக்கும் செழிப்பான தொழில்களுக்கும் தண்ணீர் அவசியம் என்றும் அவர் எடுத்துரைத்தார். ஆண்டின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்படும் குஜராத்திலிருந்து தாம் வந்திருப்பதாகக் கூறிய பிரதமர், எனவே நீரின் முக்கியத்துவத்தைத் தாம் புரிந்து கொண்டதாகக் கூறினார். மத்தியப் பிரதேசத்திலிருந்து நர்மதா நதியின் ஆசீர்வாதம் குஜராத்தின் தலைவிதியை மாற்றியமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தண்ணீர் நெருக்கடியிலிருந்து விடுவிப்பது தமது பொறுப்பு என்று அவர் கூறினார். புந்தேல்கண்ட் மக்கள், குறிப்பாக விவசாயிகள், பெண்களின் சிரமங்களைக் குறைக்க உண்மையாக உழைக்கப் போவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ், புந்தேல்கண்டுக்கு ரூ .45,000 கோடி நீர் தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் கீழ் டௌதான் அணைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வழிவகுத்தது என்றார். இந்த அணை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு கால்வாயைக் கொண்டிருக்கும் என்றும், இது சுமார் 11 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கடந்த பத்தாண்டுகள் இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நீர் பாதுகாப்பின் காலமாக நினைவுகூரப்படும்" என்று திரு நரேந்திர மோடி கூறினார். முந்தைய அரசுகள் நீர் தொடர்பான பொறுப்புகளை வெவ்வேறு துறைகளுக்கு பிரித்துக் கொடுத்தன என்றும், ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது தமது அரசுதான் என்றும் அவர் கூறினார். முதன்முறையாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்குவதற்காக தேசிய இயக்கம் தொடங்கப்பட்டதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய 70 ஆண்டுகளில், 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் இருந்தன என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில், 12 கோடி புதிய குடும்பங்களுக்கு குழாய் நீரை வழங்கியுள்ளதாகவும், இந்தத் திட்டத்திற்காக ரூ. 3.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் மற்றொரு அம்சமான நீரின் தர பரிசோதனை குறித்து குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் 2,100 நீர் தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், கிராமங்களில் குடிநீரை பரிசோதிக்க 25 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த முயற்சி ஆயிரக்கணக்கான கிராமங்களை அசுத்தமான நீரைக் குடிக்கும் கட்டாயத்திலிருந்து விடுவித்துக், குழந்தைகளையும் மக்களையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 100 பெரிய பாசனத் திட்டங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்தன என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்த பழைய பாசனத் திட்டங்களை முடிக்க தமது அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், நவீன பாசன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், மத்தியப் பிரதேசத்தில் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் நிலம் உட்பட, கிட்டத்தட்ட ஒரு கோடி ஹெக்டேர் நிலம் நுண்ணீர் பாசன வசதிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சொட்டு, நீரையும் திறம்பட பயன்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர் நிலைகளை உருவாக்கும் இயக்கத்தை எடுத்துரைத்தார். இதன் விளைவாக நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட அமிர்த நீர் நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். நாடு முழுவதும் ஜல் சக்தி அபியான் மற்றும் மழையைப் பிடிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டதையும், நாடு முழுவதும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட செறிவூட்டல் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையும் பிரதமர் குறிப்பிட்டார். நகர்ப்புற, கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களின் தீவிர பங்கேற்புடன் இந்த இயக்கங்களை மக்கள் வெற்றி பெறச் செய்கிறார்கள் என்று அவர் எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மிகக் குறைந்த நிலத்தடி நீர் மட்டம் உள்ள மாநிலங்களில் அடல் பூஜல் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையில் மத்தியப் பிரதேசம் எப்போதும் முன்னணியில் உள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, சுற்றுலா என்பது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு துறை என்று கூறினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாற உள்ளது என்று கூறிய அவர், இந்தியாவைப் பற்றிய உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் உலகம் விரும்புவதாகவும், இது மத்தியப் பிரதேசத்திற்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும் கூறினார். உலகின் மிகவும் கவர்ச்சிகரமான முதல் பத்து சுற்றுலா இடங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்க செய்தித்தாள் ஒன்றில் சமீபத்தில் வெளியான செய்தியை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பயணத்தை எளிதாக்குவதற்காக உள்நாட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதை சுட்டிக் காட்டிய பிரதமர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இ-விசா திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவில் பாரம்பரிய, வனவிலங்கு சுற்றுலாவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கான சிறந்த வாய்ப்புகளை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, கஜுராஹோ பகுதி வரலாற்று, ஆன்மீக பாரம்பரியம் நிறைந்தது என்றும் கண்டாரிய மகாதேவ், லக்ஷ்மண் கோயில், சௌசாத் யோகினி கோயில் போன்ற இடங்களைக் இம்மாநிலம் கொண்டுள்ளது என்றும் கூறினார். இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த, நாடு முழுவதும் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் கஜுராஹோவில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது எனவும் இந்த நோக்கத்திற்காக கஜுராஹோவில் அதிநவீன சர்வதேச மாநாட்டு மையம் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சுற்றுலாத் துறை குறித்து மேலும் கூறிய திரு நரேந்திர மோடி, மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய வசதிகளை மேம்படுத்தவும் மத்திய பிரதேசத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். சாஞ்சி, பிற புத்தமதத் தலங்கள் புத்தமத சுற்றுவட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்றும், காந்தி சாகர், ஓம்காரேஷ்வர் அணை, இந்திரா சாகர் அணை, பேதாகாட், பன்சாகர் அணை ஆகியவை சுற்றுச்சூழல் சுற்றுவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார். கஜுராஹோ, குவாலியர், ஓர்ச்சா, சந்தேரி, மண்டு போன்ற இடங்கள் பாரம்பரிய சுற்றுச்சாலையின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பன்னா தேசிய பூங்காவும் வனவிலங்கு சுற்றுவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஆண்டு சுமார் 2.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பன்னா புலிகள் சரணாலயத்திற்கு வருகை தந்தனர் என்றும் குறிப்பிட்டார். கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு பயன் அளிக்கும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளூர் பொருளாதாரத்தை கணிசமாக வலுப்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர், சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பொருட்களை வாங்குவார்கள் எனவும், ஆட்டோ - டாக்ஸி சேவைகள், ஹோட்டல்கள், தாபாக்கள், ஹோம்ஸ்டேக்கள், விருந்தினர் மாளிகைகள் போன்ற வசதிகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் விளக்கினார். பால், தயிர், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளும் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள மத்தியப் பிரதேசத்தைப் பாராட்டிய திரு நரேந்திர மோடி, வரும் பத்தாண்டுகளில் மத்தியப் பிரதேசம் நாட்டின் தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், பந்தேல்கண்ட் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றும் என்றும் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் சி.படேல், மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மத்திய வேளாண் - விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சர் திரு வீரேந்திர குமார், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதுடன், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும். இந்த திட்டம் பிராந்திய மக்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்கும். இதனுடன், நீர்மின் திட்டங்கள் 100 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை ஆற்றலை வழங்கும். இந்த திட்டம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

1153 அடல் கிராம சுஷாசன் கட்டிடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். உள்ளூர் அளவில் நல்ல ஆளுகைக்கு வழிவகுக்கும் கிராமப் பஞ்சாயத்துகளின் பணிகளின் நடைமுறை அம்சத்திலும் பொறுப்புகளிலும் இந்த கட்டடங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

எரிசக்தி தன்னிறைவு, பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற அரசின் இலக்குக்குப் பங்களிக்கும். இது நீர் ஆவியாதலைக் குறைப்பதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் உதவும்.

 

*****

PLM/DL  


(Release ID: 2087881) Visitor Counter : 54