கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த முன்முயற்சிகள் -மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

Posted On: 22 DEC 2024 7:06PM by PIB Chennai

திரிபுராவில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா பல்வேறு முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா, கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், திரிபுராவின் ஒவ்வொரு விவசாயி மற்றும் ஏழைகளும் நலன்  பெறுவதற்காக கூட்டுறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக திரு அமித் ஷா தனது உரையில் தெரிவித்தார். பிரதமர் திரு மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்த்தியுள்ளார் என்றும் 2027-ஆம் ஆண்டில் நாடு பொருளாதாரத்தில் 3-வது இடத்தை எட்டும் என்றும் திரு ஷா  எடுத்துரைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த நடைமுறையில் 140 கோடி இந்தியர்களும் பங்கேற்பதை உறுதி செய்வதும் நமது இலக்கு என்று அவர் மேலும் கூறினார். வளம், மகிழ்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியன ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிநபருக்கும் சென்றடைய வேண்டும். கூட்டுறவு மட்டுமே இதை அடைவதற்கான ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன என்றும் அவற்றின் மூலம் 350 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்துள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் கூறினார். அமுல், இஃப்’கோ, கே.ஆர்.ஐ.பி.ஹெச்.சி.ஓ மற்றும் நாஃபெட் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் மக்களை கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்க பணியாற்றியுள்ளன. இன்று, வங்கி, விவசாய நிதி, மருத்துவ உதவி மற்றும் உர விநியோகம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

நபார்டு வங்கி மூலம் நடமாடும் ஊரக சந்தைகளைத் தொடங்கியுள்ளோம் என்றும், நபார்டு வங்கி மூலம் இந்தியா பிராண்டின் கீழ் ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை மலிவு விலையில் வழங்குவதை இந்த சந்தைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். தரமான விதைகளை வழங்குவதற்கும், இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், விவசாயிகளின் விளைபொருட்களை உலக சந்தையில் இணைப்பதற்கும் தேசிய அளவிலான மூன்று பன்நோக்கு கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு அமைத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். திரிபுராவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் இந்த மூன்று சங்கங்களிலும் உறுப்பினராகச் சேர விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது, திரிபுராவில் பால்வளம், மீன்வளம், நுகர்வோர் கூட்டுறவு, கால்நடை மற்றும் கோழி கூட்டுறவு உட்பட 3,138 வெவ்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன என்று திரு ஷா மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087053

***

(Release ID: 2087053)

TS/BR/RR/KR


(Release ID: 2087178) Visitor Counter : 35