பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் 

Posted On: 21 DEC 2024 9:22PM by PIB Chennai


பாரத் மாதா கி - ஜெய்!
வணக்கம்!
நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன். 

நண்பர்களே,

இன்று, இந்த தருணம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பாரதப் பிரதமர் குவைத் வந்துள்ளார். பாரதத்தில் இருந்து குவைத் செல்ல வெறும் 4 மணி நேரம் மட்டுமே ஆகும், ஆனால் ஒரு பிரதமருக்கு இந்த பயணத்தை மேற்கொள்ள 40 ஆண்டுகள் ஆனது. உங்களில் பலர் பல தலைமுறைகளாக குவைத்தில் வசித்து வருகிறீர்கள். உங்களில் சிலர் இங்கேயே பிறந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் உங்கள் சமூகத்தில் இணைகிறார்கள்.  

நண்பர்களே,

பாரதத்திற்கும் குவைத்துக்கும் இடையிலான உறவு நாகரிகங்கள், கடல், பாசம் மற்றும் வணிகம் ஆகியவற்றைப் பற்றியது. இந்தியாவும், குவைத்தும் அரபிக்கடலின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன. பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாற்றைப் போலவே நமது தற்போதைய உறவுகளும் வலுவானவை.  ஒரு காலத்தில் குவைத்திலிருந்து முத்துக்கள், பேரீச்சம்பழங்கள், அற்புதமான குதிரை இனங்கள் ஆகியவை பாரதத்திற்கு அனுப்பப்பட்டன, அதே நேரத்தில் பாரதத்திலிருந்து பல பொருட்கள் இங்கு வந்தன. இந்திய அரிசி, தேயிலை, மசாலாப் பொருட்கள், துணிகள் மற்றும் மரம் ஆகியவை குவைத்துக்கு தொடர்ந்து கொண்டு வரப்பட்டன. குவைத் மாலுமிகள் நீண்ட பயணங்களை மேற்கொள்வதற்கு கப்பல்களைக் கட்ட பாரதத்திலிருந்து கிடைத்த தேக்கு மரம் பயன்படுத்தப்பட்டது.  குவைத்தின் முத்துக்கள் பாரதத்திற்கு வைரங்களைப் போல விலைமதிப்பற்றவை. இன்று, இந்திய நகைகள் உலகளவில் புகழ் பெற்றவை, அந்த பாரம்பரியத்திற்கு குவைத் முத்துக்கள் பங்களித்துள்ளன.  

நண்பர்களே,

கடந்த காலத்தில் கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் மூலம் உருவாக்கப்பட்ட பிணைப்பு, இந்த புதிய நூற்றாண்டில் இப்போது புதிய உயரங்களை எட்டியுள்ளது. இன்று, குவைத் இந்தியாவின் மிக முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தக கூட்டாளியாக உள்ளது, மேலும் குவைத் நிறுவனங்களுக்கு பாரதம் ஒரு பெரிய முதலீட்டு இடமாகவும் உள்ளது. பாரதம் மற்றும் குவைத் குடிமக்கள் கடினமான காலங்கள் மற்றும் நெருக்கடிகளின் போது எப்போதும் ஒருவருக்கொருவர் துணை நின்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், இரு நாடுகளும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தன. பாரதத்திற்கு மிகவும் உதவி தேவைப்பட்டபோது, குவைத் எங்களுக்கு திரவ ஆக்ஸிஜனை வழங்கியது. ஒவ்வொருவரையும் விரைந்து செயல்பட ஊக்குவிக்க பட்டத்து இளவரசர் தனிப்பட்ட முறையில் முன்வந்தார்.  நெருக்கடியை எதிர்த்துப் போராட குவைத்துக்கு உதவ தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்பியதன் மூலம் பாரதம்  தனது ஆதரவை வழங்கியதில் நான் திருப்தி அடைகிறேன். குவைத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பாரதம் தனது துறைமுகங்களைத் திறந்து வைத்தது.  

இன்று தொடங்கவுள்ள அரேபிய வளைகுடா கோப்பை குறித்து நீங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். குவைத் அணியை உற்சாகப்படுத்த நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள். தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்ததற்காக மேதகு அமீர் அவர்களுக்கு நன்றி. பாரதம்-குவைத் உறவை நீங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி. 
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086904 

*************


BR/KV


(Release ID: 2086989) Visitor Counter : 9