உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தியாகிகளுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை செலுத்தினார்

Posted On: 16 DEC 2024 5:00PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகளை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரையும், அவர் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகம் செய்த 1,399 தியாகிகளை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவியதற்காக சத்தீஸ்கர் அரசைப் பாராட்டுவதாக கூறினார். இந்த நினைவகம் இந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய சத்தீஸ்கர் அரசு, நக்சலிசத்தை ஒழிப்பதில் உறுதியாக உள்ளது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார். மேலும் அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்க இந்த அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த இலக்கை அடைய விரிவான மூன்று அம்ச உத்தியை அரசு பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். முதலாவதாக, வன்முறையைக் கைவிட்டு சமூகத்தின் மைய நீரோட்டத்தில் மீண்டும் இணைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, வன்முறைப் பாதையைக் கைவிட மறுப்பவர்களைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடைசியாக, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சத்திஸ்கரில் ஒரு ஆண்டிற்குள், 287 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்றும்,  சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், 837 பேர் சரணடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக கூறினார்.

2026 மார்ச் 31-க்குப் பிறகு, அன்னை தந்தேஸ்வரியின் புனித பூமியில் நக்சல் தீவிரவாதம் மூலம், ஒரு துளி இரத்தம் கூட சிந்தப்படாது என்று திரு. அமித் ஷா உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084865

***

VL/IR/RJ/DL


(Release ID: 2084916) Visitor Counter : 60