வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சமநிலையான, லட்சியமான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன: பியூஷ் கோயல்

Posted On: 12 DEC 2024 11:17AM by PIB Chennai

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, இத்தாலி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய ஆணைய தூதுக்குழுவினருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா, வர்த்தகத் துறை செயலாளர், டிபிஐஐடி செயலாளர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தகம் குறித்து பேசிய திரு கோயல், இரு தரப்பினரும் ஒரு சமநிலையான, லட்சியமான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (எஃப்.டி.ஏ) நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார். 9 சுற்று தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தரப்பினரும் நல்ல புரிந்துணர்வுடன், வணிக ரீதியாக அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அரசியல் வழிகாட்டுதல்கள் தேவையாகும். எந்தவொரு நீடித்த விவாதமும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு கொள்கையை மதிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது வளர்ச்சியின் மாறுபட்ட பாதைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்பிறகு, விரைவான மற்றும் அதிவேக வளர்ச்சி மூலம் 2047-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35 டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டும். பெரிய மற்றும் பயன்படுத்தப்படாத பொருளாதார திறனை ஒப்புக் கொண்ட ஐரோப்பிய தரப்பு, இரு பொருளாதாரங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், அவற்றின் விநியோகச் சங்கிலிகளில் வலிமையை உருவாக்குவதன் மூலமும் இரு தரப்பினரும் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறுவார்கள் என்பதை சுட்டிக் காட்டியது. இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவும் இந்தக் கலந்துரையாடல் வாய்ப்பளித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை தவிர அத்தகைய பொறிமுறையைக் கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் இருதரப்பு சரக்குப் பொருட்கள் வர்த்தகம் 2023-24-ம் ஆண்டில் 137.41 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது  பொருட்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக ஐரோப்பிய யூனியனை மாற்றியது. கூடுதலாக, 2023-ம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் சேவைகளுக்கான இருதரப்பு வர்த்தகம் 51.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் மதிப்புச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தவும் பல்வகைப்படுத்தவும் இந்தியாவுக்கு உதவும். உலகளாவிய வர்த்தகத்தில் தனது சந்தைப் பங்கை அதிகரிக்க முக்கிய உலகப் பொருளாதாரங்களுடன் சமநிலையான ஒப்பந்தங்களை உருவாக்க இந்தியா முயன்று வருகிறது.

***

(Release ID: 2083565)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2083619) Visitor Counter : 25