சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் பாதிப்பைக் குறைக்க 100 நாள் நாடு தழுவிய தீவிர இயக்கம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள 347 மாவட்டங்களில், நோயாளிகளைக் கண்டறிந்து விரைந்து சிகிச்சை அளிக்க இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது: மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா
Posted On:
07 DEC 2024 3:33PM by PIB Chennai
இந்தியாவின் காசநோய் ஒழிப்பு முயற்சிகளில் ஒரு முக்கிய அம்சமாக, மத்திய சுகாதாரம் - குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, 100 நாள் காசநோய் ஒழிப்பு இயக்கத்தை ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று (07.12.2024) தொடங்கி வைத்தார்.
ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, ஹரியானா சுகாதார அமைச்சர் திருமதி ஆர்த்தி சிங் ராவ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்கள் திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, நாடு முழுவதும் 347 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்த இயக்கத்தின் குறிக்கோள், கண்டுபிடிக்கப்படாத காசநோய் உள்ள நோயாளிகளைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதும் காசநோயால் ஏற்படும் இறப்புகளை கணிசமாகக் குறைப்பதும் ஆகும் என்று கூறினார்.
காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்குக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் நோக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
2030-ம் ஆண்டு என்ற காலக்கெடுவுக்கு முன்பே காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுவதாகக் கூறினார்.
நாடு முழுவதும் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் கட்டமைப்பு இருப்பதால் தற்போது காசநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 2014-ல் 120 ஆக இருந்த ஆய்வகங்களின் எண்ணிக்கையை தற்போது 8,293 ஆக உயர்த்தியதன் மூலம் நோய் கண்டறியும் சேவைகளை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் 87% ஆக மேம்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
1.17 கோடிக்கும் அதிகமான காசநோய் நோயாளிகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ரூ. 3,338 கோடி மதிப்புள்ள நி-க்ஷய் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்று திரு நட்டா எடுத்துரைத்தார். அரசு சமீபத்தில் நி-க்ஷய் போஷன் தொகையை ரூ. 500-ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தியதாகவும் அவர் கூறினார்.
புதிய காசநோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், தனியார் மருத்துவர்கள் கூட தகவல் தெரிவிப்பதை அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது என்று திரு ஜே.பி. நட்டா தெரிவித்தார். இது ஒரு சிறிய படியாகத் தோன்றினாலும் இது தனியார் துறையில் காசநோய் அறிவிப்புகளின் விகிதத்தில் 8 மடங்கு அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் காசநோயால் ஏற்படும் இறப்புகளும் இந்தியாவில் கணிசமாகக் குறைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காசநோயை ஒழிக்க சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதியேற்று செயல்பட வேண்டும் என்று கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தமது உரையை நிறைவு செய்தார்.
***
PLM /DL
(Release ID: 2081938)
Visitor Counter : 40