பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியின கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 NOV 2024 3:18PM by PIB Chennai
மதிப்பிற்குரிய பீகார் ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர் அவர்களே, பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு ஜுவல் ஓரம் அவர்களே, திரு ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு சிராக் பாஸ்வான் அவர்களே, திரு துர்காதாஸ் யுகே அவர்களே. பிர்சா முண்டாவின் வாரிசுகளே, பீகார் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, ஜமுயைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.
கடந்த ஆண்டு இதே நாளன்று நான் உலிஹாத்துவில் உள்ள தர்தி ஆபா பிர்ஸா முண்டா கிராமத்தில் இருந்தேன். இன்று, தியாகி தில்கா மஞ்சியின் வீரத்தைக் கண்ட மண்ணில் நான் இருக்கிறேன். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் இன்று தொடங்கி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் நிகழ்ச்சியில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
தர்தி ஆபா பிர்சா முண்டாவின் இந்த பிரம்மாண்டமான நினைவுக்கு இடையே, 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது முடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. எனது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு சுமார் ஒன்றரை லட்சம் நிரந்தர வீடுகள், பழங்குடியின குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பள்ளிகள், விடுதிகள், பழங்குடியின பெண்களுக்கான சுகாதார வசதிகள், பழங்குடி பகுதிகளை இணைக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள், பழங்குடி கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இதில் அடங்கும். தேவ் தீபாவளி அன்று 11,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளுக்குள் நுழைகின்றன. இதற்காக அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கலாச்சாரமாக இருந்தாலும் சரி, சமூக நீதியாக இருந்தாலும் சரி, இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மனநிலை தனித்துவமானது. திருமதி திரெளபதி முர்முவை குடியரசுத்தலைவராக நியமிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது, பா.ஜ.கவின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிர்ஷ்டமும் கூட என்று நான் கருதுகிறேன். இவர் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் ஆவார். மிகவும் பின்தங்கிய பழங்குடியின சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. அவர்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களைக் குறைக்க, 24,000 கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் நாட்டில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின குடியிருப்புகளின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. இந்தத் திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நேரத்தில், ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகங்களுக்கு ஆயிரக்கணக்கான நிரந்தர வீடுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த சமூகங்களின் குடியிருப்புகளை இணைக்க நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நண்பர்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பழங்குடியினர் நலன் எப்போதும் முன்னுரிமையாக இருந்து வருகிறது. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பழங்குடியினர் பகுதிகள் மற்றும் குடும்பங்களின் மேம்பாட்டிற்கான பட்ஜெட் 25,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. எங்கள் அரசு இதை 5 மடங்கு உயர்த்தி 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நாட்டில் உள்ள 60,000க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களின் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை நாங்கள் தொடங்கி வைத்தோம். தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம உத்கர்ஷ் திட்டத்தின் கீழ், பழங்குடி கிராமங்களில் சுமார் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். பழங்குடியின சமூகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
நண்பர்களே,
பழங்குடியின பாரம்பரியத்தை பாதுகாக்க எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பழங்குடியின கலை மற்றும் கலாச்சாரத்திற்காக சீரிய பங்களிப்பை வழங்கிய பல நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டாவின் பெயரில் பிரம்மாண்டமான அருங்காட்சியகத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். பகவான் பிர்ஸா முண்டாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு அனைத்து பள்ளி மாணவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பாதல் போய் அருங்காட்சியகம், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ராஜா சங்கர் ஷா மற்றும் குன்வர் ரகுநாத் ஷா அருங்காட்சியகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. இன்று, ஸ்ரீநகர் மற்றும் சிக்கிமில் இரண்டு பழங்குடியின ஆராய்ச்சி மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, பகவான் பிர்ஸா முண்டாவின் நினைவாக நினைவு நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் பழங்குடியின சமுதாயத்தின் வீரம் மற்றும் பெருமையை நாட்டிற்கு தொடர்ந்து நினைவூட்டும்.
பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறிப்பிடத்தக்க இலக்குகளை நிர்ணயிக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. நாம் ஒன்றிணைந்து பழங்குடியினரின் நெறிமுறைகளை புதிய பாரதத்தின் அடித்தளமாக மாற்றுவோம். பழங்குடி சமூகத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்போம், பல நூற்றாண்டுகளாக அவர்கள் பாதுகாத்து வரும் பாரம்பரியங்களிலிருந்து கற்றுக்கொள்வோம். இதைச் செய்வதன் மூலம், உண்மையிலேயே வலுவான, வளமான, திறமையான பாரதத்தை நாம் உருவாக்குவோம்.
மிகவும் நன்றி!
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2073609
*****
RB/DL
(Release ID: 2079501)
Read this release in:
Urdu
,
English
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam