ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய பிரச்சாரம் நயி சேத்னா 3.0 -ஐ மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 26 NOV 2024 12:38PM by PIB Chennai

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய பிரச்சாரமான நயி சேத்னா – மூன்றாவது பதிப்பை 

மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் உள்ள ரங் பவன் கலையரங்கில் நேற்று தொடங்கி வைத்தார்.  பெண்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்று திரு சவுகான் தம து உரையில் குறிப்பிட்டார். பாலின அடிப்படையிலான வன்முறை என்பது கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் நீடிக்கும் ஒரு பிரச்சினை என்று அவர் கூறினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி முன்னிலையில், நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், மரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.

13 மாநிலங்களில் 227 புதிய பாலின ஆதார மையங்களையும் திரு சவுகான் தொடங்கி வைத்தார். இந்த நிலையங்கள் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல்களை அணுகுவதற்கும், சம்பவங்கள் பற்றி புகாரளிப்பதற்கும் சட்ட உதவியைப் பெறுவதற்கும் பாதுகாப்பான இடங்களாக இவை இருக்கும்.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு  எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, நயி சேத்னா 3.0 தொடக்க விழாவில் அப்கொய்பஹானாநஹி  #abkoibahananahi என்ற பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி  தொடங்கி வைத்தார். 10 கோடி சுய உதவிக் குழு பெண்கள், பெண்களை மையமாகக் கொண்ட 49 திட்டங்கள், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், 24 மணி நேர தேசிய உதவி எண்கள், ஓரிடத் தீர்வு மையங்கள், விரைவான நீதி முயற்சிகள் மூலம் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவை வழங்குதல் ஆகியவற்றில் மத்திய அரசின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் ஆகியோரும் பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த சமூகத்தின் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உள்துறை அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், நீதித் துறை ஆகிய எட்டு  அமைச்சகங்கள் / துறைகள் கையெழுத்திட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு ஆலோசனையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த ஆலோசனை "முழுமையான அரசு" அணுகுமுறையின் உணர்வை உள்ளடக்கியுள்ளது. இது பாலின அடிப்படையிலான வன்முறைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு ஒத்துழைப்பு அமைச்சகம் / துறையின் வலிமையையும் மேம்படுத்துகிறது.

ஜார்க்கண்ட், புதுச்சேரி மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பாலின சமத்துவ சாம்பியன்கள்  தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அனைத்து வகையான பாலின அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அது குறித்து பேசவும் நடவடிக்கை எடுக்கவும் சமூகங்களை ஊக்குவித்தல், சரியான நேரத்தில் உதவிக்கான ஆதரவு அமைப்புகளை அணுக உதவுதல், வன்முறைக்கு எதிராக தீர்க்கமாக செயல்பட உள்ளூர் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை நயி சேத்னா 3.0-ன் நோக்கங்களில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பிரதிநிதிகள், இந்தியா முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கூட்டு சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

******

TS/SMB/KV/DL

 


(Release ID: 2077581) Visitor Counter : 5