தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 4

திரைப்படத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையிலான  நெருக்கம் அதிகரிக்கும்போது இந்திய சினிமா மேலும் சிறந்ததாக மாறும் - திரைப்பட இயக்குநர் மணிரத்னம்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மணிரத்னம், கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) "இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளை ஈர்க்கக்கூடிய திரைப்படங்களாக மாற்றுதல்" என்ற முதன்மை ஆலோசனை வகுப்பில் (மாஸ்டர் கிளாஸ்) பங்கேற்றுப் பேசினார்.  மற்றொரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் கௌதம் வி மேனனுடனான ஒரு ஆழமான கலந்துரையாடலில், மணிரத்னம் பேசினார். இலக்கியத்தை திரைப்படத்துக்குள் கொண்டு வரும்  கலையை அவர்கள் ஆராய்ந்தனர். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மதிப்புமிக்க ஆலோசனைகளை மணிரத்னம் வழங்கினார்.

தாம் இன்னும் பார்வையாளராகவே அமர்ந்திருப்பதாக மணிரத்னம் பணிவுடன் குறிப்பிட்டார்.  திரைப்படத்துறையில் பல அனுபவங்களைக் கொண்ட அவர், தாம் இன்னும் ஒரு தொடக்க நிலை கலைஞரைப் போலவே உணர்வதாகக் கூறினார்.

மணிரத்னம் சினிமாவுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை விரிவாக எடுத்துரைத்தார். சினிமாவுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு எவ்வளவு நெருக்கமாக அமைகிறதோ, அவ்வளவு சிறப்பாக இந்திய சினிமா மாறும் என்று அவர் கூறினார். எழுதப்பட்ட வார்த்தைகளை அழுத்தமான காட்சிகளாக மாற்றும் நுட்பமான கலையை திரைப்படத் துறையினர் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புத்தகங்களை திரைப்படங்களாக மாற்றுவதன் நுணுக்கங்களைப் பற்றி விவாதித்த மணிரத்னம், திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்றும் அதே நேரத்தில் புத்தகங்கள்  எழுத்தின் மூலம் கற்பனையை தூண்டுபவை என்றும் தெரிவித்தார். ஒரு வாசகரின் கற்பனைக்கு உயிர் கொடுப்பதில் ஒரு திரைப்பட இயக்குநர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். திரைக்கதைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்படலாம் என்றாலும், அந்த மாற்றங்கள் கதையை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன் மைய சாரத்தை மாற்றக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இலக்கிய எழுத்துகளை ஒரு திரைப்பட எழுத்தாக மாற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955-ம் ஆண்டு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சமீபத்திய தமது மகத்தான படைப்பான 'பொன்னியின் செல்வன்' பற்றி மணிரத்னம் விவரித்தார். இந்தப் படம் சோழர் காலத்தை எவ்வாறு சித்தரிக்கிறது  என்பதை எடுத்துரைத்தார். 
 
மாஸ்டர் கிளாஸ் எனப்படும் இந்த முதன்மை ஆலோசனை வகுப்பில் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஒரு வளமான அனுபவத்தை மணிரத்னத்தின் வழிகாட்டுதல் உரை வழங்கியது. இது ஆர்வமுள்ள அனைத்து கதைசொல்லிகளுக்கும் சிறந்த, மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்குவதாக அமைந்தது.

**** 
 

PLM/KV

iffi reel

(Release ID: 2076306) Visitor Counter : 6