கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
'சாகர்மந்தன்' வெற்றிக்கு ஒருமித்த கருத்துடன் ஒத்துழைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
Posted On:
19 NOV 2024 12:50PM by PIB Chennai
தில்லியில் நடைபெற்றுவரும் முதல் கடல்சார் நிகழ்வான சாகர்மந்தன் என்ற பெருங்கடல் உரையாடல் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மனிதகுலத்தின் வளமான எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை ஒருமித்த கருத்துடன் உருவாக்குவதற்காக சாகர்மந்தனின் வெற்றிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நைஜீரியாவில் உள்ள முகாம் அலுவலகத்திலிருந்து அனுப்பிய தமது செய்தியில், பிரதமர் மோடி, "சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான கடல்சார் கட்டமைப்புக்கான நமது தொலைநோக்குப் பார்வை - இந்தியப் பெருங்கடல் அல்லது இந்தோ பசிபிக் பிராந்தியம் என - உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. 'இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி' கடல் வளங்களை நாடுகளின் வளர்ச்சிக்கான முக்கிய தூணாக கருதுகிறது. பெருங்கடல்கள் குறித்த இந்த உரையாடல் விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவதோடு, நாடுகளுக்கு இடையே அமைதி, நம்பிக்கை மற்றும் நட்புறவை மேம்படுத்துகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் பாடுபடுகையில், சாகர்மந்தன் போன்ற உரையாடல்கள் ஒருமித்த கருத்து, கூட்டாண்மை மற்றும் மிக முக்கியமாக, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் விலைமதிப்பற்றவையாகும். அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளுடன், இந்த விவாதங்கள் தொலைதூரத்திலும் பரவலாகவும் எதிரொலித்து, பிரகாசமான, இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியம் மற்றும் இந்தத் துறையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அத்துடன் உலகின் செழிப்பான பகுதிகளில் ஒன்றாக அது திகழ்ந்தது. லோத்தல், தோலாவிரா போன்ற செழிப்பான துறைமுக நகரங்கள், சோழ வம்சத்தின் கடற்படைகள், சத்ரபதி சிவாஜி மகாராஜின் வீரதீரச் செயல்கள் ஆகியவை பெரும் உத்வேகம் அளிக்கின்றன. பெருங்கடல் நாடுகள் மற்றும் சமூகங்களுக்கான பகிரப்பட்ட பாரம்பரியமாகவும், சர்வதேச வர்த்தகத்திற்கான உயிர்நாடியாகவும் உள்ளன. இன்று, நாடுகளின் பாதுகாப்பும், வளமும் பெருங்கடல்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. பெருங்கடல்களின் திறனை அங்கீகரித்து, இந்தியாவின் கடல்சார் திறன்களை அதிகரிக்க பல உருமாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில், 'வளமைக்கான துறைமுகங்கள்', 'முன்னேற்றத்துக்கான துறைமுகங்கள்', 'உற்பத்தித்திறனுக்கான துறைமுகங்கள்' என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, நமது துறைமுகங்களின் திறனை இரட்டிப்பாக்கியுள்ளோம். துறைமுக செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும், செயல்முறையைப் பூர்த்தி செய்யும் நேரத்தைக் குறைப்பதன் மூலமும், அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், இந்தியாவின் கடற்கரையை மாற்றியமைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
கடல்சார் துறையில் மாற்றத்திற்கான முன்னோடி பங்கை ஒப்புக் கொண்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், சாகர்மந்தன் – பெருங்கடல் உரையாடலின் முதல் பதிப்பின் வெற்றிக்காக பிரதமரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியின் செய்தி குறித்து, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா கடல்சார் துறையில் உருமாற்றத்தை பார்த்து வருகிறது. பிரதமர் திரு. மோடி அவர்களின் செய்தி, இந்த முதல் கடல்சார் சிந்தனைத் தலைமை அமைப்பான சாகர்மந்தன் அடைய விரும்பிய சாரத்தை உள்ளடக்கியுள்ளது. தமது சொந்த வார்த்தைகளில், பிரதமர் மோடி, 'வளர்ச்சியடைந்த பாரதம்' கட்டமைப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்த அற்புதமான மன்றத்தை உருவாக்க அயராத முயற்சியை நல்கிய அனைவரின் சார்பாகவும், 'சாகர்மந்தன் – பெருங்கடல் உரையாடல்' வெற்றிக்காக வளமான ஞானம், நுண்ணறிவு மற்றும் உணர்வு ஆகியவற்றின் தொலைநோக்கு செய்திக்காக உலகின் மிகவும் பிரபலமான தலைவர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
***
(Release ID: 2074551)
TS/PKV/RR/KR
(Release ID: 2074579)
Visitor Counter : 26