பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 19 NOV 2024 8:34AM by PIB Chennai

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில்  இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

புக்லியாவில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் இந்தியா-இத்தாலி ராஜாங்க ரீதியிலான கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டும் வியூக ரீதியிலான கூட்டுச் செயல் திட்டம் 2025-29-ஐ அறிவித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொடர்பு மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்புகள் போன்ற முக்கிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு, திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை இந்த செயல் திட்டம் மேற்கொள்ளும்.

இரு தரப்பினரும் பல களங்களில் வழக்கமான அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மற்றும் அதிகாரப்பூர்வ உரையாடல்களை நடத்துவார்கள். கூட்டு உற்பத்தி, அந்தந்த தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் நகர்வு ஆகியவை இருதரப்பு கூட்டாண்மைக்கு உத்வேகத்தையும், மேலும் ஆழத்தையும் அளிப்பதுடன், இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கும் பயனளிக்கும்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீடித்த வளர்ச்சி ஆகிய இருதரப்பிலும் பகிரப்பட்ட மதிப்புகளை நிலைநிறுத்த பலதரப்பு மற்றும் உலகளாவிய மேடைகளில் தங்களது பேச்சுவார்த்தையைத் தொடரவும், இணைந்து பணியாற்றவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட பன்முக உத்திசார் முன்முயற்சிகளை செயல்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற அவர்கள் இசைவு தெரிவித்தனர்.

***

(Release ID: 2074441)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2074538) Visitor Counter : 39