தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 5

ஐ.எஃப்.எஃப்.ஐ 2024 க்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு செய்தார்

2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) 55 வது பதிப்பிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், முக்கிய பங்குதாரர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது, திரைப்படத் திருவிழாவின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை டாக்டர் முருகன் வலியுறுத்தினார். இந்திய திரைப்பட விழா கோவாவின் துடிப்பான கொண்டாட்ட உணர்வு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திரைப்படத் திருவிழாவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல அனைத்து தரப்பினரும் விடாமுயற்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய திரைப்படங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாக ஐ.எஃப்.எஃப்.ஐயின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "இந்த விழா, இந்திய திரைப்படங்களை உருவாக்கும் மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் பரந்த சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துவது அவசியம். மேலும் பிராந்திய திரைப்படங்கள் முதல் தேசிய வசூல் திரைப்படங்கள் வரை இந்திய திரைப்படங்களின் பன்முகத்தன்மையை உண்மையாக பிரதிபலிப்பதாக இத்திரைப்படத் திருவிழா இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
திருவிழாவின் அணுகல் மற்றும் தெரிவுநிலையை உலகளவில் விரிவுபடுத்துவதற்கான உலகளாவிய ஊடகங்களின் திறனையும் டாக்டர் முருகன் எடுத்துரைத்தார். சர்வதேச திரைப்பட விழா, உலகெங்கிலும் இருந்து கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, இந்திய திரைப்படங்களுக்கும், உலகளாவிய பார்வையாளர்களுக்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதை உறுதி செய்ய, சர்வதேச ஊடக தளங்களை அனைத்து பங்குதாரர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர், விழா நடைபெறும் முக்கிய இடங்களை  டாக்டர் முருகன் பார்வையிட்டார். ஐ.எஃப்.எஃப்.ஐ திரையிடல்களுக்கான முக்கிய இடங்களாக இருக்கும் காலா அகாடமி மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கம் மற்றும் இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் பொழுதுபோக்கு அரங்கமான 'ஐ.எஃப்.எஃப்.ஐ.ஸ்டா' இடம்பெறும் டி.பி மைதானத்தையும் அவர் பார்வையிட்டார். திருவிழாவின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறும் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத் துறையின் மல்டிமீடியா கண்காட்சி நடைபெறும் 'சபர்நாமா' தரியா சங்கம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2073456&reg=3&lang=1


***********

TS/BR/KV

iffi reel

(Release ID: 2073588) Visitor Counter : 21